முருகன் கோயில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவை தொடர்ந்து நேற்று மாலை முருகன் பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் , ரயிலடி சித்தி விநாயகர் கோயில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி, கந்தக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி, ஒய்.எம்.ஆர்.பட்டி சுப்பிரமணிய சுவாமி, என்.ஜி.ஓ., காலனி தண்டாயுதபாணிசுவாமி கோயில் உட்பட திண்டுக்கல்லை சுற்றிய முருகன் கோயில்களில் அக்.22 முதல் கந்த சஷ்டி விழா நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை முருகபெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. பக்தர்கள் திராளாக கலந்து கொண்டு அரோகரா பக்தி கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர். இதை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவை தொடர்ந்து இன்று சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் சுப்ரமணிய சுவாமி கிரிவலப் பாதையில் வலம் வர பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க சூரன்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. இதன் பின் சுவாமிக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடக்க மேளதாளம், அதிர்வேட்டுகள் முழங்க சுவாமி கோயிலுக்கு சென்றார். சின்னாளபட்டி: சதுர்முக முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா யாக சாலை பூஜைகளுடன் துவங்கி, கலசாபிஷேகம், அன்னை காமாட்சியிடம் வேல் வாங்குதல் நடந்தது. பின்னர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.