கழிவுப்பொருட்கள் கொட்டும் இடமாக மாறிய அத்திக்குளம் கண்மாய் காப்போம்
வடமதுரை : அத்திகுளத்துபட்டி அத்திகுளத்தை பலரும் கழிவு பொருட்கள் கொட்டும் இடமாக பயன்படுத்துவதாலும், நீர் வரத்து, வெளியேறும் பகுதிகளை சீரமைப்பு பணி செய்யாமலும் இருப்பதாலும் அப்பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.வடமதுரை பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது அத்திக்குளத்துபட்டி, கன்னிமார்பாளையம். இவற்றிற்கு நடுவில் அமைந்துள்ளது அத்திகுளம். இப்பகுதி மேட்டுப்பட்டியை சார்ந்தது என்றாலும் இந்த குளத்தின் பெயரை கொண்டே இங்கு அதிகரித்த குடியிருப்புகளால் அத்திகுளத்துபட்டி என தனி பெயர் ஏற்பட்டுள்ளது.பேரூராட்சியின் 3 வது வார்டு பகுதிக்குள் இருக்கும் அத்திகுளம் 44 ஏக்கரில் உள்ளது. கரிவாடன்செட்டிபட்டி, அப்பிநாயக்கன்பட்டி பகுதி தரிசு நிலங்களில் பெய்யும் மழை நீர் ஓடை வழியாக அத்திகுளத்திற்கு வந்து சேர்கிறது. இக்குளத்தை சார்ந்து 50 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறும் நிலங்கள் உள்ளன. இதன் மறுகால் நீர் நரசிங்கபுரம், பம்புரெட்டி, வடமதுரை மந்தை குளங்களுக்கும் சென்றடையும். ஆனால் பேரூராட்சி பகுதியில் இருந்தும் நீர்வரத்து வாய்க்காலும், மறுகால் நீர் வெளியேறும் வழிகளும் பராமரிப்பின்றி கிடக்கின்றன. இதற்கிடையில் சிலர் தங்கள் பகுதியில் உள்ள கழிவு பொருட்களை குளத்தில் கொட்டி செல்வதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். -நிலத்தடி நீருக்கு வாய்ப்பு
எஸ்.சரவணக்குமார், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர், வி.மேட்டுப்பட்டி: 2023ல் குளத்தின் கரை பலப்படுத்தும் பணியும், உள்ளே வளர்ந்திருந்த சீமை கருவேல மரங்களும் அகற்றப்பட்டன. இந்நிலையில் சிலர் நீர்பிடிப்பு பகுதிக்குள் கழிவு பொருட்களை கொட்டுவதோடு , வரத்து வாய்க்கால், மதகு வழி பாசனத்திற்கு நீர் செல்லும் வாய்க்கால்களும் பராமரிப்பின்றி கிடைக்கின்றன. இதனால் சில ஆண்டுகளாக நீர் நிரம்பாத சூழ்நிலையில் குளத்தை நம்பி உள்ள ஏராளமான விவசாயிகள் பரிதவிக்கின்றனர். இக்குளம் ஒருமுறை நிரம்பினால் சுற்றிலும் பல நுாறு ஏக்கர் பகுதி கிணறு, ஆழ்துளை கிணறுகளுக்கு நிலத்தடி நீர் வளம் கிடைக்கும். -வேதனையாக உள்ளது
எஸ்.கோபிகிருஷ்ணன், அ.தி.மு.க., வார்டு செயலாளர், ஏ.வி.பட்டி: அ.தி.மு.க., ஆட்சியின் கடைசி நேரத்தில் இக்குளத்தில் பராமரிப்பு பணி செய்ய பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முயற்சி நடந்தது. அரசியல் பிரச்னைகளால் பணி நிறுத்தப்பட்டு 2023ல் குளத்தில் வளர்ந்திருந்த சீமைகருவேல மரங்கள் அகற்றப்பட்டது. கரை பகுதி பலமாக்கப்பட்டது. அதே நேரம் நீர் வரத்து ஓடையில் சீரமைப்பு பணி நடக்கவில்லை. மதகு கட்டமைப்புகளும் சீரற்று கிடக்கிறது. பாசன வாய்க்கால் பகுதிகளும் ஆக்கிரமிப்பால் சிதைந்து கிடக்கிறது. இந்நிலையில் சிலர் கழிவு பொருட்களை கொட்டி குளத்தை நிரப்புவது வேதனையாக உள்ளது.