மாநில அளவில் கணித ரங்கோலி போட்டி
திண்டுக்கல்: திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியின் மரியம் கணித மன்றம் சார்பில் மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையிலான கணித வினாடி வினா, ரங்கோலிப் போட்டிகள் நடந்தன. முன்னாள் மாணவர் சேவியர் ஜெரால்டு புனிதன் நிதி பங்களிப்பில் போட்டிகள் நடத்தப்பட்டது. தலைமை ஆசிரியர் ஸ்டீபன்லுார்து பிரகாசம் துவக்கி வைத்தார். வினாடி வினா போட்டியில் 38 பள்ளிகளில் இருந்து 114 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கணித ரங்கோலி போட்டியில் 27 பள்ளிகளை சேர்ந்த 81 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வினாடி வினா போட்டியில் தமிழ்வழி கற்றல் பள்ளிகள் பிரிவில் திண்டுக்கல் எம்.எஸ்.பி., சோலை நாடார் மேல்நிலைப்பள்ளி, ஆங்கிலவழி கற்றல் பள்ளிகள் பிரிவில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, ஏசு சபை நிர்வாக பள்ளிகள் பிரிவில் திண்டுக்கல் மரியன்னை மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றன. ரங்கோலி போட்டியில் திண்டுக்கல் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது. வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு பரிசுத்தொகை, சுழற்கேடயம், சான்றிதழ்களை முன்னாள் மாணவர் ஜோன்ஸ் வழங்கினார். ஏற்பாடுகளை கணித ஆசிரியர் மரியராஜேந்திரன் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.