நகர் பகுதியில் நெரிசலை குறைக்க புது பஸ் சேவை
வடமதுரை: திண்டுக்கல் நகரையொட்டிய நிறுத்தங்களில் பயணிகள் நெரிசல் பிரச்னையை தவிர்க்க வடமதுரையில் இருந்து சின்னாளபட்டி வரை இயங்கும் வகையில் டவுன் பஸ் சேவைகளை துவக்க வேண்டும். திண்டுக்கல் வடமதுரை இடையே என்.ஜி.ஓ., காலனி, போலீஸ் குடியிருப்பு, ம.மூ.கோவிலுார் பிரிவு, தாமரைப்பாடி, எஸ்.பி.எம்., கல்லூரி, வேல்வார்கோட்டை என முக்கிய நிறுத்தங்கள் உள்ளன. தாமரைப்பாடி பகுதியில் மூன்று கல்லுாரிகளும் வேல்வார்கோட்டை பகுதியில் பல தொழிற்சாலைகளும் உள்ளன. வடமதுரை வழியே இயக்கப்படும் டவுன் பஸ்கள் அனைத்தும் கிராமங்களில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல் செல்கின்றன. இதனால் வட மதுரைக்கு வரும்போதே பஸ்களில் முழு அளவில் பயணிகள் உள்ளனர். வடமதுரைக்கு அடுத்து திண்டுக்கல் வரை ஒவ்வொரு நிறுத்தத்திலும் பயணிகள் ஏறுவதால் தாமரைப்பாடியில் இருந்து படிக்கட்டில் தொங்கும் நிலை வந்து விடுகிறது. அடுத்து நகர் பகுதியை நெருங்கும்போது பயணிகள் மேலும் பஸ்சில் ஏற முடியாத நிலையில் பரிதவிக்கின்றனர். இதனால் நகர் பகுதியையொட்டி இருக்கும் மக்களின் சிரமங்களை குறைக்க காலை, மாலை நேரங்களில் வடமதுரையில் திண்டுக்கல் வழியே சின்னாளபட்டி வரை சென்று திரும்பும் வகையில் டவுன் பஸ் சேவைகளை இயக்க வேண்டும். இதன் மூலம் காந்தி கிராம பல்கலையில் படிக்கும் ஏராளமான வடமதுரை சுற்றுப்பகுதி கல்லுாரி மாணவர்களும் பயன்பெறுவர். மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.