முன்னேற்பாடுகள் இல்லை.. தரையில் அமர்ந்த பணியாளர்கள்
திண்டுக்கல் திண்டுக்கல்லில் நடந்த துாய்மை பணியாளர்களுக்கான குறைதீர் கூட்டத்தில் போதிய முன்னேற்பாடுகள் செய்யாததால் தரையில் அமர்ந்து மனு எழுதினர். அதிகாரிகள் அலட்சிப்போக்கால் இருக்கை வசதி கூட இல்லாமல் துாய்மை பணியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் துாய்மை பணியாளர்களுக்கான குறைதீர் கூட்டம் காலை 11 :00 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 10:00 மணி முதலே வர துவங்கினர். இருக்கை வசதி, குடிநீர் போன்ற எவையுமே தேவைக்கேற்றவாறு இல்லை. கலெக்டருக்கு உயர் அதிகாரிகளுடன் விடியோ கான்பரன்ஸ் மீட்டிங் இருந்ததால் நேர்முக உதவியாளர் , இதர அதிகாரிகளுடன் கூட்டம் தொடங்கியது. நேரம் அதிகமாக துாய்மை பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இவர்களை ஒழுங்குபடுத்தவோ, ஏதேனும் அறிவிப்பு வழங்கவோ எவரும் முன்வராதநிலையில் துாய்மை பணியாளர்கள் தரையில் உக்கார்ந்து மனுக்களை எழுதுவது, சரிபார்ப்பது போன்ற பணிகளை பார்த்தனர். மதியம்12:30 மணிக்கு கலெக்டர் சரவணன் வர கூட்டம் இயல்பாக நடந்தது.துாய்மை பணியாளர்கள் கூறியதாவது : நீண்ட கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. ஆனால் எந்தவித வசதிகளுமே செய்து கொடுக்கவில்லை. இதனால் தரையில் அமரும்படியாகிவிட்டது. துாய்மை பணியாளர்களை ஒரே நேரத்தில் அழைக்காமல் தாலுகா வாரியாக அழைத்திருந்தால் எங்களின் மனுக்களை படித்து பார்க்கவாவது நேரம் கிடைத்திருக்கும். முறையான முன்னேற்பாடுகளோ, திட்டமிடலோ இல்லாமல் இருந்தது. அதிகாரிகள் கூட்டம் என்றால் இப்படி நடத்தமுடியுமா என்றனர்.