உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 2026 அல்ல... 2056லும்...ஸ்டாலினே முதல்வர் அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி ஆருடம்

2026 அல்ல... 2056லும்...ஸ்டாலினே முதல்வர் அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி ஆருடம்

திண்டுக்கல்:''தமிழக மக்களுக்கு செய்திருக்கும் நலத்திட்டங்களால் 2026 மட்டுமின்றி 2056லும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தான் முதல்வர்,'' என, திண்டுக்கல்லில் தமிழக அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி கூறினர். அவர்கள் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும் என ஆய்வு செய்து முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்தவுடன் உடனடியாக கோடவுனுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 2024ல் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டு கோடவுன்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தாண்டு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கிறது. பத்தாண்டுகள் அ.தி.மு.க., ஆட்சியில் 376 அரிசி ஆலைகள் இருந்தன. ஆனால் தி.மு.க., தலைமையில் அரசு வந்தபின் 700 அரிசி ஆலைகளாக உயர்ந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் ஆலைகளில் 6 லட்சம் மெட்ரிக் டன் அரிசி அரைக்கப்பட்டது. தற்போது அது 12 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்திருக்கிறது. இந்திய உணவுக்கழகம், அரிசி ஆலைகளில் கலர் சார்ட் கருவி பொருத்த வேண்டும் என விதி வகுத்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் பின்பற்றப்படாத அந்த விதியை தற்போதுள்ள தி.மு.க., அரசு அனைத்து அரிசி ஆலைகளிலும் நடை முறைப்படுத்தி உள்ளது. தமிழக அரசு இந்தாண்டு 47 லட்சத்து 50 ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இன்னும் 6 நாட்களில் 48 லட்சம் மெட்ரிக் டன்னாக உற்பத்தியை பெருக்கி சாதனை படைக்க உள்ளோம். இதுவரை இரண்டரை கோடி மெட்ரிக் டன்னுக்கு மேலாக நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளோம். அ.தி.மு.க., ஆட்சியில் நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.1960 ஆக இருந்தது. செப்., 1 முதல் சன்ன ரகத்திற்கு ரூ.2 ஆயிரத்து 545, மற்ற ரகங்களுக்கு ரூ.2ஆயிரத்து 500 கொடுக்க திட்டமிட்டுள்ளோம். தேர்தல் வாக்குறுதியில் கொடுத்ததை விட ரூ.45 கூடுதலாக வழங்க உள்ளோம். நெல் கொள்முதல் நிலையங்களில் தவறு நடப்பதை தடுக்க அனைத்து இடங்களிலும் புகார் எண்ணுடன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ