வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாழ்த்துக்கள் லோக சமஸ்தா சுதினோ பவந்து
வடமதுரை அருகே பி.கொசவபட்டி சிக்குபோலகவுண்டன்பட்டியில் தனது தோட்டத்தில் ஆண்டு முழுவதும் பறவைகளுக்கு உணவு கிடைக்கும் வகையில் பல வகை பழங்கள் தரும் மரங்களை இயற்கை விவசாயியான டி.சிக்கணன்-காளியம்மாள் தம்பதி வளர்த்து மினி வனப்பகுதி போல் பராமரிக்கின்றனர்.ஒவ்வொரு மனிதனும் ஓய்வு காலத்தில் உறவுகளுக்கு அடுத்தபடியாக மனது இளைப்பாறுவது இயற்கையோடு தான். அதுவும் தான் நட்டு வளர்த்த மரக்கன்று மரமாகி பலன் தருவதும், செடிகளில் பூக்கள் மலர்வதை காணும் போது மனது மகிழ்ச்சியின் உச்சத்தில் லயித்து நிற்கும். அந்த வகையில் வடமதுரை ஒன்றியம் பி.கொசவபட்டி அடுத்த சிக்குபோல கவுண்டன்பட்டியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய தலைவர் எஸ்.காளியம்மாள், அவரது கணவர் டி.சிக்கணன் ஆகியோர் தங்கள் தோட்டத்தில் பல வகையான பழ மரங்களை வளர்த்து பறவைகளுக்கானதாக மாற்றி உள்ளனர்.இவர்களது தோட்டத்தில் ஆரஞ்சு, சாத்துக்குடி, நெல்லி, நாவல், கொடுக்காபுளி, கொய்யா, மா, சப்போட்டா, சீத்தா, எலுமிச்சை, வேம்பு, பூவரசு, அத்தி, தென்னை, அரசு, ஆல், இலந்தை என பல வகை மரங்கள் உள்ளன. ரசாயண உரங்கள் இல்லாமல் இயற்கை விவசாய முறையில் இவை வளர்கின்றன. இதனால் மகசூல் என்பது குறைவாக கிடைக்கும். இயற்கையான வனப்பகுதி போல் பராமரிக்கப்படுவதால் ஏராளமான பறவைகளுடன் விஷ ஜந்துகளும் இங்கு வலம் வருகின்றன.இயற்கையான முறையில் வளர்க்கிறோம்-எஸ்.காளியம்மாள், முன்னாள் ஒன்றிய தலைவர், வடமதுரை: எனது தோட்டத்தில் உரம் ஏதும் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் இம்மரங்கள் வளர்க்கப்படுகின்றன. உரம் இல்லாததால் மகசூல் குறைவாகவே கிடைக்கும். நமது தோட்டம் மூலம் பறவைகளுக்கு ஆண்டு முழுவதும் உணவு கிடைக்க வேண்டும் என்பது எனது கணவரின் விருப்பம், நோக்கமாகும். இங்கு பல வகை மூலிகைகளும் வளர்கின்றன. பறவைகளில் எச்சம் மூலம் விதை பரவல் ஏற்பட்டு பல மரங்களும் தன்னிச்சையாக வளர்ந்துள்ளன. முதல் 3 ஆண்டுகளுக்கு மரங்களுக்கு நீர் தந்து வளர்த்துவிட்டால் போதும், பின்னர் அதுவாகவே வளர்ந்துவிடும். இங்கு வரும் பறவைகளை யாருமே விரட்ட மாட்டோம். பெரும் பகுதி மரங்களில் மகசூல் எடுக்காமல் பறவைகளுக்கானதாக அப்படியே விட்டுள்ளோம்.இதுவும் ஓர் -மன திருப்திடி.சிக்கணன், இயற்கை விவசாயி, சிக்குபோல கவுண்டன்பட்டி: நாட்டில் பலரும் அன்னதானம் மூலம் மக்களுக்கு உணவு வழங்குவதுபோல் எங்கள் மூலம் பறவைகளுக்கு உதவி கிடைக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளோம். இங்கு ஏராளமான பறவைகளும், விஷ பூச்சிகளும் வாழ்கின்றன. நீர் சேகரிக்கும் பொருட்டு பண்ணை குட்டை அமைத்துள்ளோம். தோட்டத்தில் பணிபுரிவோர் குடும்ப நலன் கருதி எங்கள் செலவில் காப்பீடு செய்துவதை வழக்கமாக கொண்டுள்ளோம். மரங்கள் துாய்மையான காற்றை மனிதர்களுக்கு வழங்குகின்றன. இத்தோட்டம் மூலம் பெரியளவில் வருமானம் எதிர்பார்க்காமல் பறவைகளுக்கு நம்மால் இரை கிடைக்க செய்யும் மன திருப்தியே பெரிது என உள்ளோம் என்றார்.
வாழ்த்துக்கள் லோக சமஸ்தா சுதினோ பவந்து