உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திரிசங்கு நிலையில் சிரமப்படும் பாலப்பட்டி- மக்கள் தேவை மாற்று நடவடிக்கை

திரிசங்கு நிலையில் சிரமப்படும் பாலப்பட்டி- மக்கள் தேவை மாற்று நடவடிக்கை

வேடசந்தூர்: பாலப்பட்டி ஊராட்சியில் உள்ள 3 குக்கிராம மக்கள், தங்களது நிலங்களுக்கான பட்டா, சிட்டா ஆவணங்கள் கைத்தியங்கோட்டை ஊராட்சியிலும், வீடுகளுக்கான வீட்டு வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட ஆவணங்களுக்காக பாலப்பட்டி ஊராட்சியிலும், ரேஷன் பொருட்களை வாங்க அருகில் உள்ள கூவக்காபட்டி ஊராட்சிக்கும் என அலைந்து, திரிசங்கு நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான ஆவணங்களை ஒரே ஊராட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வேடசந்தூர் ஒன்றியம், பாலப்பட்டி ஊராட்சியில் 22 குக்கிராமங்கள் உள்ளன. இதில் நாகம நாயக்கனூர், கூத்தாங்கல்பட்டி, ராமநாயக்கனூர் பகுதி மக்கள் தங்களின் நிலங்களுக்கான பட்டா, சிட்டா, நிலவரி மற்றும் வருவாய் துறை சம்பந்தமான ஆவணங்களுக்கு அருகில் உள்ள கைத்தியன்கோட்டை ஊராட்சி, வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். வீட்டு வரி, வீட்டுமனை பட்டா, தண்ணீர் வரி சம்பந்தமான பிரச்சனைகள், தேர்தலின் போது ஓட்டளிப்பது என பாலப்பட்டி ஊராட்சிக்கும், ரேஷன் கார்டு, ரேஷன் பொருட்களை வாங்க வேண்டுமென்றால் அருகில் உள்ள கூவக்காபட்டி ஊராட்சிக்கு செல்ல வேண்டும். இப்படியாக பாலப்பட்டி ஊராட்சியில் உள்ள மூன்று கிராம மக்கள் 3 ஊராட்சிகளில், தங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து வருவது என்பது தேவையில்லாத அலைச்சலையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாக குமுறுகின்றனர். ஒரு ஊராட்சிக்குள் வாழும் மக்களுக்கு அந்த ஊராட்சி பகுதியிலேயே போதிய ஆவணங்களை வழங்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய வருவாய்த்துறையினர் முன் வர வேண்டும் என்கின்றனர். பாலப்பட்டி ஊராட்சியில் உள்ள பாலப்பட்டி, பண்ணையத்துர், குருவனூர் பகுதி மக்கள் வேடசந்தூர் வரவேண்டுமென்றால் குருவனூரில் இருந்து, தெற்கு நோக்கிச் செல்லும் தார் ரோட்டின் வழியாகத்தான் வர வேண்டும். தார் ரோடு தற்போது மெட்டல் ரோடாக மாறிவிட்டது. இந்த ரோட்டை புதுப்பித்து மீண்டும் தார் ரோடு ஆக மாற்றித் தர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் பாலப்பட்டி, பண்ணைத்தூர், குருவனூர் பகுதி மக்களுக்கு காவிரி குடிநீர் விநியோகம் இதுவரை வழங்கவில்லை என்றும் நல்ல குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும் இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை