இல்லவே இல்லை ரோடு, தெருவிளக்குகள் பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 11வது வார்டு மக்கள்
திண்டுக்கல்: சேதமான ரோடுகள்,எங்கு பார்த்தாலும் சுற்றித்திரியும் நாய்கள், கடித்து குதறும் கொசுக்கள்,கண்ட இடமெல்லாம் குப்பை ,ஆய்வுக்கு வந்தும் தீர்க்கப்படாத பிரச்னைகள்,இல்லாத தெரு விளக்குகள்,சமூக விரோத செயல்கள்,சுகாதாரக்கேடுகள்,கண்டு கொள்ளாத அதிகாரிகள் என ஏராளமான பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் திண்டுக்கல் மாநகராட்சி 11வது வார்டு மக்கள்.மவுன்ஸ்புரம் 1 முதல் 6 தெருக்கள்,கச்சேரி தெரு,மேற்கு ரதவீதி,கொத்தனார் தெரு,வடக்கு ரதவீதி,தாலுகா ஆபிஸ் ரோடு,குருசாமி பிள்ளை சந்து,கோவில் தெரு,சன்னதி தெரு,லயன்தெரு உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்த வார்டில் எண்ணிலடங்கா பிரச்னைகளில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். வெங்காயப்பேட்டை பகுதிகளில் ரோடுகள் இல்லாமலிருப்பதால் அங்குள்ள வியாபாரிகள் நடக்க முடியாமல் தவிக்கின்றனர். சன்னதி தெரு,கோவில் தெரு பகுதிகளில் மழை நேரங்களில் ரோடுகளில் மக்கள் நடமாட முடியாத அளவிற்கு மழைநீர் தேங்கியிருக்கும் நிலை ஏற்படுகிறது. மேற்கு ரதவீதியில் எப்போதும் கனரக வாகனங்களில் லோடு இறக்குவதால் பொது மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இதனால் பலரும் முடியாமல் வேறு பாதையில் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எங்கும் சுற்றித்திரியும் கால்நடைகளால் மக்கள் அச்சத்துடனே செல்லும் நிலை தொடர்கிறது. திடீரென இவைகள் ரோட்டில் நடந்து செல்லும் பாதசாரிகளை முட்டி தாக்குகின்றன. மாநகராட்சி அதிகாரிகளோ எப்போதாவது கால்நடைகளை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். தற்போது அதுவும் இல்லை. இரவு மட்டுமில்லாமல் பகல் நேரத்திலும் கடிக்கும் கொசுக்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியில் நடமாட முடியாமல் தவிக்கின்றனர். கொசு வலைகளை பயன்படுத்தினாலும் அதனிடமிருந்து மக்கள் தப்பிக்க முடியாத நிலை உள்ளது. கொசு மருந்து அடிக்க வரும் ஊழியர்களும் ஒரு சில இடங்களில் கடமைக்கு அடித்து செல்கின்றனர். கொசு உற்பத்தி கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கொசு தடுப்பு பணியாளர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. தொடரும் இப்பிரச்னையால் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. ரோடுகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் அவைகளுக்குள் ஏற்படும் சண்டையில் மக்களை கடிக்கிறது. இதைத்தடுக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்க்கிறது. மக்கள் பிரச்னைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவை தெ ரு விளக்குகள்
பழனிசாமி, குருசாமிபிள்ளை சந்து: வெங்காயப்பேட்டை பகுதிகளில் தெரு விளக்குகள் எங்குமே இல்லாமலிருப்பதால் இரவு நேரங்களில் வியாபாரிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் கொடுத்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தெரு விளக்குகள் தேவையாக உள்ளது. ரோடுகளை சீரமைக்க வேண்டும்
சேசுராஜ்,வெங்காயப்பேட்டை: வெங்காயப்பேட்டை பகுதியில் ரோடுகள் போடாமலிருப்பதால் எங்களால் நடமாட முடியவில்லை. எங்கு பார்த்தாலும் கொசுக்களின் கூடாரமாக சாக்கடையில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. ரோடுகளை சீரமைப்பதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும். சமூக விரோதிகளை தடுக்க வேண்டும்
முத்துக்குமார், வெங்காயப்பேட்டை: வெங்காயப்பேட்டை பகுதிகளில் டாஸ்மாக் செயல்பாட்டில் இருப்பதால் அதிகமானோர் இரவில் இருள் சூழ்ந்த இப்பகுதிகளில் குவிந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மின்கம்பங்கள் சேதமாகி சாய்ந்தநிலையில் உள்ளன.ரோடுகள் மண் தரைகளாக உள்ளது. ரோடுகள் போடுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதிகாரிகள் தெருவிளக்குகளை முறைப்படுத்த வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படும்
சுப்பிரமணியன், மாநகராட்சி பொறியாளர், திண்டுக்கல்: 11 வது வார்டு கச்சேரி தெருவில் ஒரு பகுதியில் ரோடு போடப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பகுதிகளிலும் ரோடுகள் அமைப்பதற்கான பணிகள் நடக்கிறது. பல பகுதிகளில் பேவர் பிளாக் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. தாலுகா ஆபிஸ் ரோடுகளில் சாக்கடை கட்டப்பட்டுள்ளது. ரோடுகளும் அகலப்படுத்தபட்டுள்ளது. வெங்காயப்பேட்டை பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.