வெடிக்கு பதில் செடி; வெடி குண்டுக்கு பதில் விதை குண்டு மாசில்லா தீபாவளியை கொண்டாடிய இளைஞர்கள்
வத்தலக்குண்டு: விருவீடு பகுதியில் வித்தியாசமாக மாசில்லா தீபாவளி கொண்டாடிய இளைஞர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விருவீடு வைகை பாரம்பரிய இயக்கம் சார்பில் மாசில்லா தீபாவளி கொண்டாடப்பட்டது. வெடிக்கு பதில் செடி என்ற நோக்கத்தில் இந்த இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் வெடிக்கு பதிலாக பொதுமக்களுக்கு செடிகளை வழங்கி மரம் வளர்ப்பதை ஊக்குவித்தனர். அதேபோல் வெடி குண்டுகளுக்கு பதிலாக விதை பந்துகளை தயாரித்து தரிசு நிலப் பகுதிகளில் விதை பந்துகளை வீசி எரிந்து பசுமை தீபாவளியை கொண்டாடினர். மாசில்லாத தீபாவளி கொண்டாடப்பட வேண்டும் மற்றும் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடிய இந்த விழிப்புணர்வு தீபாவளி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இது குறித்து வைகை பாரம்பரிய இயக்க நிர்வாகி அருண்பாண்டி கூறுகையில், 'காலநிலை மாற்றங்களால் அதிக வெப்பம், அதிக மழை பெய்து இயற்கை சீற்றம் ஏற்படுகிறது. எதிர்காலத்தில் இந்த நிலையை மாற்றுவதற்கு இயற்கையை பாதுகாப்பது ஒரே வழியாகும். அதனை வலியுறுத்துவதற்காக பொதுமக்களும் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் வெடி இல்லா தீபாவளியை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்' என்றார்.