பழநியில் வி.எச்.பி., வேல் வழிபாடு போலீசார் குவிப்பு
பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் விஸ்வ ஹிந்து பரிஷத்(வி.எச்.பி.,) சார்பில் நடந்த வேல் வழிபாட்டையொட்டி போலீசார் குவிக்கப்பட்டனர். புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தலைமையில் வி.எச்.பி., தென் மாநில தலைவர் ராமகிருஷ்ணன், திருக்கோயில்கள், திருமடங்கள், மாநில அமைப்பாளர் செந்தில்குமார், தமிழக பிராமண சமாஜ தலைவர் ஹரிஹர முத்து ஐயர், மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் கூறியதாவது: ஜூனில் மதுரையில் நடந்த முருகன் மாநாடு தீர்மானத்தின்படி ஐப்பசி கந்த சஷ்டி விழாவில் மூன்று நாட்களுக்கு வி.எச்.பி., தலைமையில் வேல் யாத்திரை, கந்த பாராயணம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. அறுபடை வீடுகளிலும் புரட்டாசி பவுர்ணமி அன்று வேல் வழிபாடு செய்துள்ளனர். ஹிந்துக்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். ஹிந்துக்கள் வழிபாட்டை பயன்படுத்தி மதவாத சக்திகளை வேரறுக்க வேண்டும். வேல் வழிபாடு ஒரு துவக்கமாக உள்ளது. இது ஹிந்துக்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தும். கரூரில் 41 பேர் பலியானது வருத்தமளிக்கிறது. இதுபோன்று இனி நிகழாமல் அரசு தடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து டி.எஸ்.பி., தனஞ்செயன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.