பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து நுாதன திருட்டு பெண்ணை தேடும் போலீசார்
சாணார்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் -சாணார்பட்டி அருகே துணிகள் விற்பது போல் வீட்டுக்குள் நுழைந்து நூதன முறையில் பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து 7 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரத்தை திருடி தப்பிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சாணார்பட்டி அருகே கொசவபட்டி சூசையப்பர் தெருவைச் சேர்ந்தவர் ஆல்பர்ட். இவரது மனைவி ஆலிஸ் 52. நேற்று முன்தினம் ஆலிஸ் வீட்டில் தனியாக இருந்தபோது 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சேலை, நைட்டி விற்க வந்தார். ஆலிஸிடம் இதே பகுதியில் வியாபாரம் செய்ய வீடு வாடகைக்கு பார்த்து வருகிறேன். அதற்காக ஒரு நாள் மட்டும் உங்கள் வீட்டு திண்ணையில் படுத்து கொள்கிறேன் என அந்த பெண் கூறியுள்ளார். அதையடுத்து அப்பெண்ணுக்கு டீ கொடுத்துள்ளார் ஆலிஸ். அப்போது ஆலிஸிடம் அந்த பெண் தண்ணீர் கேட்டார். தண்ணீர் கொண்டு ஆலிஸ் வீட்டிற்குள் சென்ற போது மயக்க மருந்தை டீயில் அந்த பெண் கலந்துள்ளார். அந்த டீயை குடித்த ஆலிஸிற்கு மயக்கம் ஏற்பட்டு வீட்டிற்குள் சென்று உறங்கினார். நேற்று காலை வெகு நேரமாகியும் ஆலிஸ் வெளியில் வராததால் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவர் மயங்கி கிடந்துள்ளார். அவர் அணிந்திருந்த 5 பவுன் செயின், மோதிரம் 2, தோடு 2, மாட்டல் 2 என 7 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் திருடு போயிருந்தது. மயக்க மருந்து கொடுத்து நகை, பணத்தை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.