அய்யலுாரில் ரயில் பாதை மேம்பாட்டுப் பணி
வடமதுரை: விழுப்புரம் திண்டுக்கல் இரட்டை ரயில் பாதை பணி 2012ல் துவங்கியது. பகுதி பகுதியாக பணிகள் முடிக்கப்பட்டு ஆங்காங்கே இரட்டை பாதை கடந்த 2018ல் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்தது. இப்பணியில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதைகளில் தண்டவாளங்கள், பாதையை பிரிக்க உதவும் 'பாயின்ட்' கட்டமைப்புகள் 60 கேஜி தண்டவாளங்களாக பயன்படுத்தப்பட்டது. அதாவது 'கேஜி' என்பதால் பொருள் ஒரு மீட்டர் நீள துண்டு 60 கிலோ கொண்டதாகும். முன்னர் திண்டுக்கல் திருச்சி இடையே 1998ல் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டபோது 52 கேஜி தண்டவாளமும் அதற்குரிய கான்கீரிட் ஸ்லீப்பர் கட்டைகளும் பயன்படுத்தப்பட்டது. இதனால் அய்யலுாரில் முதல் பாதைக்குரிய 52 கேஜி பாயின்ட் அமைப்பு தற்போது 25 ஆண்டுகள் கடந்த நிலையில் 60 கேஜிக்குரிய 'பாயின்ட்' அமைப்பாக நிறுவும் பணி நடந்தது. ரயில் பாதையிலும், தரையிலும் செல்லக்கூடிய 2 கிரேன்கள் மூலம் புதிய 'பாயின்ட்' அமைப்பு 300 மீட்டர் துாரத்திற்கு எடுத்து சென்று பொருத்தப்பட்டது.