உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 80 அடி ஆழ ரயில் பாதையில் மழை கண்காணிப்பு தீவிரம்

80 அடி ஆழ ரயில் பாதையில் மழை கண்காணிப்பு தீவிரம்

வடமதுரை: அய்யலுார் அருகே 80 அடி ஆழ பள்ளத்தில் ரயில் பாதை செல்லும் பகுதியில் தொடர் மழையால் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருச்சி திண்டுக்கல் இடையே இருந்த மீட்டர்கேஜ் ரயில் பாதையில் கல்பட்டிசத்திரம் அய்யலுார் இடையே இரண்டு இடங்கள் மேடாக இருந்தது. இன்ஜின்கள் சரக்கு பெட்டிகளை இழுக்க முடியாமல் திணறியதுடன் கூடுதல் எரிபொருள் செலவு, தண்டவாள தேய்மானம் அதிகம் இருந்தது. 1998ல் அகலப்பாதையாக மாறிய போது இப்பிரச்னையை தீர்க்க குமரம்பட்டியை சுற்றி 5.5 கி.மீ., துாரம் புதிய வழித்தடம் உருவானது. இங்கு அதிக பட்சமாக 150 அடி அகலம், 80 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி ரயில் பாதை அமைக்கப்பட்டது. இங்கு ரயில் பாதைக்கு மேலே நீர் வழிப்பாலங்களும், ரயில் பாதை மட்டத்தில் ஓடை செல்லுமிடங்களில் நீர்வழி புதைப் பாலங்களும் பல உள்ளன. தற்போது தொடர் மழை பெய்வதால் தண்டவாளப் பகுதிக்குள் கற்கள் விழுதல், நீர் புகுதல் போன்றவற்றை கண்காணிக்க கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறிது வேகம் குறைத்து அதிக கவனத்துடன் ரயில்களை இயக்கும்படி டிரைவர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !