நீர்த்தேக்கத்தில் மூழ்கிய மாணவர் இருள், புதர்ச்செடிகளால் மீட்பு பணி ஒத்திவைப்பு
சின்னாளபட்டி: ஏ.வெள்ளோடு அருகே உள்ள கோம்பை நீர்த்தேக்கம் சமீபத்திய மழையால் நிரம்பியுள்ளது. பராமரிப்பின்றி ஆழமான குழிகள், புதர் செடிகள் பரவியுள்ளன. விபத்து அபாய சூழல் இருந்தபோதும் இப்பகுதியை சேர்ந்த பலர் அவ்வப்போது இங்கு நீச்சல் அடிக்க செல்வது வாடிக்கையாக தொடர்கிறது.நேற்று கோவை தனியார் கல்லுாரியில் 4ம் ஆண்டு படித்து வரும் ஏ.வெள்ளோடு அருகே கரடிப்பட்டியை சேர்ந்த வில்சன் ஜெரோம் 21, விடுமுறைக்கு ஊர் வந்தார். தனது உறவினர் பிரகாஷ் மெரின் 25, உடன் இங்கு குளிக்க சென்றார். தண்ணீரில் வெகுதுாரம் நீந்தி சென்ற நிலையில் திரும்பி வர முடியாமல் தவித்துள்ளார். கரையில் நின்றிருந்த பிரகாஷ் மெரின் காப்பாற்ற செல்லும் முன் வில்சன் ஜெரோம் தண்ணீரில் மூழ்கினார். அக்கம் பக்கத்தினர் முயற்சி செய்தும் மீட்க முடியவில்லை.திண்டுக்கல் தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு நேற்று இரவு 7:00 மணி வரை தேடினர். இருள், முள் புதர் செடிகள் நடைமுறை பிரச்னைகளால் தேடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தேடுதல் பணியை இன்று மேற்கொள்ள ஒத்திவைத்து உள்ளனர். அம்பாத்துரை போலீசார் விசாரிக்கின்றனர்.