சீரமைக்காத ரோடுகள், கழிவுநீரால் கொசு உற்பத்தி பரிதவிக்கும் பழனியப்பா எஸ்.பி.ஆர்.நகர் குடியிருப்போர்
திண்டுக்கல் : ஆண்டுகள் கடந்தும் சீரமைக்கப்படாத ரோடுகள், வடிகால் இருந்தும் ரோடுகளில் தேங்கும் கழிவுநீர், எப்போதும் சட்டவிரோதமாக நடக்கும் மது விற்பனை, மழை நேரங்களில் ரோட்டில் ஆறுபோல் ஓடும் மழைநீர், சகதியில் தடுமாறும் வாகன ஓட்டிகள், டெங்கு காய்ச்சலை உற்பத்தியாக்கும் கொசுக்கள், ஆக்கிரமிப்புகள் என ஏராளமான பிரச்னைகளுடன் திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகே உள்ள பழனியப்பா எஸ்.பி.ஆர்.நகர் குடியிருப்போர் வாசிகள் பரிதவிக்கின்றனர். குடியிருப்போர் நலச்சங்க தலைவர் சரவணன், செயலாளர் கார்த்திகேய பெருமாள், பொருளாளர் பழனிசாமி, செயற்குழு உறுப்பினர்கள் ராமராஜ், சையது உசேன், தண்டபாணி, பெருமாள் கூறியதாவது: 1 முதல் 5 தெருக்களை கொண்ட இப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு மேலாக ரோடுகள் சீரமைக்கபடாமல் சேதமாக கிடக்கிறது. தெருவிளக்குகள் மாற்றி 10 ஆண்டுகள் ஆகி விட்டது. தெரு விளக்குகள் முறையாக அமைக்காததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து உள்ளது. மாலைக்கு மேல் பெண்கள், முதியவர்கள் என யாருமே வெளியில் நடமாட முடியாத நிலை நீடிக்கிறது. 2 தெரு பகுதியில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் குளம்போல் தேங்கி டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை உற்பத்தியாக்குகிறது. பல ஆண்டுகளாக இதே நிலை தொடர்வதால் மக்கள் தவியாய் தவிக்கின்றனர். குடிநீர் செல்லும் குழாய்களை கூட கழிவுநீர் சூழ்ந்திருக்கிறது. சாக்கடை வடிகால்கள் இதுவரை துார்வாரப்படவில்லை. மணல், செடியுடன் புதர் மண்டி உள்ளது. இங்குள்ள காலி மனைகள் கழிவுநீர் தேங்கும் குளமாகவும், புதர்மண்டி விஷப்பூச்சிகளின் குடியிருப்பாகவும் மாறியுள்ளது. அரசு அதிகாரிகள் சிலர் இப்பகுதியில் குடியிருந்தாலும் கண்டுகொள்வதில்லை. மழைநீர் மாதக்கணக்கில் தேங்கி சகதியாக மாற அவ்வழியில் வரும் பொது மக்கள் தடுமாறுகின்றனர். எண்ண முடியாத அளவிற்கு தெரு நாய்கள் சுற்றித்திரிந்து மக்களை கடிக்கின்றன. இவைகள் இரவில் துரத்துவதால் பெண்கள் அச்சமடைந்து வீட்டிற்குள் முடங்குகின்றனர். பல பகுதிகளில் கழிவுநீர் தேங்கியிருப்பதால் தொற்று நோய் அபாயம் உள்ளது. 2 தெரு நுழைவு பகுதியில் சட்டவிரோத மது விற்பனை எப்போதும் நடக்கிறது. போலீசார் இதை கண்டு கொள்வதே இல்லை. சிசிடிவி கேமராக்கள் சொந்த செலவில் வீடுகளுக்கு நாங்களே பொருத்தி உள்ளோம். புறநகர் பைபாஸ் ஒட்டிய பகுதி என்பதால் இங்கு போலீசார் ரோந்து அவசியமாகிறது என்றனர்.