முடங்கிய ரோடு பணி போராட்ட எச்சரிக்கை
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் ரோடு பணியை விரைந்து முடிக்காததால் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ள மக்கள் அது குறித்தான தகவலை முதல்வர் தனிப்பிரிவு தொடங்கி போலீஸ் ஸ்டேஷன் வரை பதிவுத்தபால் மூலமாக தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் நகர் பகுதியை யொட்டியுள்ள பகுதி பாலகிருஷ்ணாபுரம். இப்பகுதி 1 வது வார்டில் முல்லை, குறிஞ்சி, மல்லிகை, ரோஜா, செண்பகம் தெரு என 12 தெருக்கள் உள்ளன. இப்பகுதிக்கு உள்கட்டமைப்பு வசதிகள் நிதி விரிவாக்கத்திட்டத்தின் கீழ் திய தார்ரோடு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. , ரோடுகள் முழுவதும் ஜல்லிகற்கள் பரப்பிய நிலையில் பணிகள் முடங்கியது. இதனால், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் நடந்து செல்லவும், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை இயக்கவும் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பல முறை கோரிக்கை வைத்தும் நடக்காததால் போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவெடுத்துள்ளனர். முதல்வர் தனிப்பிரிவு தொடங்கி போலீஸ் ஸ்டேஷன் வரை கடிதம் அனுப்பி உள்ளனர். ஊர்மக்கள் சார்பாக பதிவுத்தபால் அனுப்பிய ஊராட்சி முன்னாள் உறுப்பினர் பாண்டி கூறியதாவது : ரோடு அமைப்பதற்காக ஐல்லிகற்கள் கொட்டிய நிலையில் வேலை விரைவாக முடிக்க வில்லை. ஒரு மாதத்திற்கு முன் அதிகாரிகள் ஆய்வு பணிக்கு வந்த போது அப்பகுதி மக்கள் பணி தாமதம் குறித்து கேள்வி எழுப்பினர். இதனால் அப்பணிக்கு ஒதுக்கியிருந்த டெண்டரை கேன்சல் செய்து விட்டனர் மீண்டும் அந்த ரோடு பணிக்கு எந்த டெண்டரும் கோரப்படாததால் ஜல்லி கற்கள் பரப்பிய நிலையிலே ரோடுகள் உள்ளன. மக்கள் போக்குவரத்திற்கு பெரும் சிரமப்படுகின்றனர். வயதானவர்கள் தடுமாறி கீழே விழுவதும், டூவீலர்களில் செல்பவர்கள் கீழே விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலைக்கு செல்வதும் தொடர்கிறது. ரோடு பணியை விரைந்து முடிக்கக் கோரி செப். 1ம் தேதி திண்டுக்கல்-திருச்சி தேசிய தெடுஞ்சாலை பைபாஸ் ரோட்டில் மறியல் செய்ய முடிவெடுத்துள்ளோம் என்றார்.