ஆன்லைன் மூலம் ரூ.18 லட்சம் மோசடி: சென்னை வாலிபர் கைது
திண்டுக்கல்,:திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்தவரிடம் ஆன்லைன் மூலம் ரூ.18 லட்சம் மோசடி செய்த சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர். நத்தம் பகுதியை சேர்ந்தவர் சாய்நாத் 30. இவரது அலைபேசிக்கு வாட்ஸ்ஆப்,டெலிகிராம் போன்ற செயலிகளுக்கு ஆன்லைன் டிரேடிங் மூலம் பணம் செலுத்தினால் இரட்டிப்பாக கிடைக்கும் என குறுந்தகவல் வந்துள்ளது. இதை உண்மை என நம்பிய சாய்நாத் சம்பந்தப்பட்ட அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். எதிர் தரப்பில் பேசிய நபர் வங்கி கணக்குகளை தெரிவித்து அதில் பணம் செலுத்தினால் அப்படியே இரட்டிப்பாக தருகிறோம் எனக் கூறினார். இதை நம்பிய சாய்நாத் சிறிது சிறிதாக ரூ.18 லட்சத்தை அனுப்பினார். இதன் பின் அந்த பணத்தை மீண்டும் எடுக்கலாம் என நினைத்து பரிசோதித்தார். அவரால் முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சாய்நாத், திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். ஏ.டி.எஸ்.பி., தெய்வம், இன்ஸ்பெக்டர் விக்டோரியா லுார்து மேரி, எஸ்.ஐ.,லாய்டு சிங் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். சாய்நாத் அனுப்பிய பணம் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த முகமது இப்ராகிம் 34, வங்கி கணக்கிற்கு சென்றது கண்டறியப்பட்டது. அதன்படி எஸ்.ஐ., லாய்டு சிங் தலைமையிலான போலீசார் சென்னை சென்று முகமது இப்ராகிமை கைது செய்தனர். ஏற்கனவே இவர் மீது ஆவடி போலீஸ் ஸ்டேஷனில் இது போன்ற வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.