குழந்தை பிரிவு வார்டில் புகை; பெண்கள் ஓட்டம்
திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவுக்கட்டடம் முதல்மாடியிலிருந்து புகைமூட்டம் கிளம்பியது.புகை வார்டுக்குள் பரவியதால்அங்கிருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்கள் குழந்தைகளுடன் ஓட்டம் பிடித்தனர். கல்லுாரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி, அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.சுகந்தி ராஜகுமாரி கூறுகையில் , ''வார்டுக்குள் பச்சிளம் குழந்தைகளை சுகாதாரமாக பராமரிக்க டயாப்பர் வழங்கப்படுகிறது. இதை பயன்பாட்டுக்கு பிறகு துாக்கி எறிவதற்கு பதிலாக எரித்து அப்புறப்படுத்த கழிப்பறை அருகே 'டயாப்பர் எரியூட்டும் மிஷின்' பொருத்தப்பட்டுள்ளது.குறிப்பிட்ட கால இடவெளியில் மிஷினின் பயன்நிலையை சோதிப்பது வழக்கம். அதன்படி சோதனைக்காக டயாப்பரை எரித்துள்ளனர். அதனால் உருவான புகை அதற்கென அமைக்கப்பட்ட குழாய் வழியாக வெளியேறாமல் வார்டுக்குள் பரவியதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. மற்றபடி தீ விபத்து ஏற்படவில்லை என்றார்.