குப்பையில்லா சோலையை உருவாக்கும் குருவி அமைப்பு
குப்பையில்லா சோலை காடுகளை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என சபதம் எடுத்து பணியாற்றுகின்றனர் கொடைக்கானல் சோலை வனங்களை துாய்மைப்படுத்தும் சோலை குருவி அமைப்பின் சேவை அளப்பரியதாக உள்ளது.5 ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் சோலை குருவி அமைப்பு துவங்கப்பட்டது. இவர்களது நோக்கமே வானுயர்ந்த சோலைக்காடுகளில் பசுமையை அதிகரிப்பதாகும். இதற்கு இடையூறாக உள்ள குப்பையை அகற்றி தன்னகத்தே இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற உயர் கொள்கையை இறுக பற்றி செயல்படுகின்றனர். மாதந்தோறும் இந்த அமைப்பை சேர்ந்த 120 பேர் கொடைக்கானலை சுற்றியுள்ள வன நில பகுதியில் குவிந்துள்ள பிளாஸ்டிக்,இதர குப்பையை அகற்றி வன நிலங்களை பளிச்சிட செய்தனர். இதுவரை 43 மாத நிகழ்வுகளை நடத்தி 5 ஆண்டில் அடியெடுத்துள்ளனர். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் வனப்பகுதியிலிருந்து சேகரிக்கும் குப்பையை ஓவியங்களாக வரைந்து அதில் பிளாஸ்டிக் குப்பைகள் மூலம் அழகான மான், மயில், யானை,இயற்கை சார்ந்த ஓவிய அமைப்புகளை உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். அது மட்டுமல்லாது பறவைகளை பார்வையிடுதல், சோலை வனங்கள் குறித்து பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி மாணவர்களுக்கு இயற்கையின் அருமையை விளக்குகின்றனர். கடந்த ஆண்டு கொடைக்கானலில் உள்ள மரங்களின் பண்புகள் குறித்தும், அவற்றின் பயன்கள் குறித்த செண்பக மரம் என்ற புத்தகத்தையும் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இதுவரை 30 டன் குப்பையை வனப்பகுதியிலிருந்து சேகரித்து அவற்றை அப்புறப்படுத்தியுள்ளனர். இந்த அமைப்பின் அளப்பரிய சேவையில் தன்னார்வலர்கள் பலர் இணைந்து செயல்படுகின்றனர். சிலர் நாள்தோறும் கொடைக்கானல் நகரை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் குப்பையை அகற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். வனத்தை காப்பாற்ற வேண்டும்
மரிய லியோ,ஒருங்கிணைப்பாளர்,திண்டுக்கல்: கொடைக்கானலில் தன்னார்வலர்கள் இணைந்து சோலை குருவி அமைப்பை தோற்றுவித்தோம். 120 பேர் பங்கேற்றுள்ளனர். இதுவரை 43 மாத நிகழ்வுகளை ஏற்படுத்தியுள்ளோம். இதில் கல்லுாரி,பள்ளி மாணவர்கள் எங்களுடன் இணைந்து செயல்படுகின்றனர். சுற்றுலா நகரான கொடைக்கானலில் சோலை காடுகளை அழகுற பராமரித்து அதில் அரிய மரங்களை பாதுகாப்பதே எங்களது அமைப்பின் நோக்கமாகும். தன்னார்வலர்கள் பலர் தங்களுக்கு உதவிகரமாக பணியாற்றுகின்றனர். மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றோம். இதுவரை வனப்பகுதியை ஒட்டிய நிலங்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பையை அகற்றும் போது வனவிலங்குகள், அரிய மரவகைகள் உள்ளிட்டவற்றை கண்டுள்ளோம். தொடர்ந்து எங்களது அமைப்பு தன்னலமற்று இச் சேவையை செய்வதில் பெருமை கொள்கிறோம். ஒட்டுமொத்த கொடைக்கானல் வனப்பகுதியை பாதுகாப்பதே எங்களின் நோக்கமாகும். குப்பை இல்லா சோலை காடுகளை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என உறுதி மொழியை ஏற்றுள்ளோம்.