தலைமை ஆசிரியை பணி மாறுதலுக்கு எதிர்ப்பு: மாணவர்கள் போராட்டம்
வத்தலக்குண்டு:திண்டுக்கல் மாவட்டம் கட்டக்காமன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயா பணி மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியையாக விஜயா 16 ஆண்டுகளாக பணிபுரிந்தார். தற்போது அவர் கணவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். இதையறிந்த பள்ளி மாணவர்கள் கவலையடைந்தனர். நேற்றுகாலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் காலை உணவு உண்ணாமல் பள்ளி முன் 'வேண்டும் வேண்டும் எங்கள் தலைமை ஆசிரியை விஜயா மீண்டும் வேண்டும்' என்று அட்டையில் எழுதி கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் சமாதானப்படுத்தியும் கேட்கவில்லை. இதையடுத்து அங்கு சென்ற மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராமன் மாணவர்களை சமாதானப்படுத்தினார். அப்போது மாணவர்கள், 'எங்களை தாய் போல் பார்த்து கொண்டதுடன் பள்ளிக்கு புதிய கட்டடங்கள், பாத்ரூம் வசதிகள், தனியார் பள்ளிக்கு இணையாக பள்ளியை தரம் உயர்த்திய தலைமை ஆசிரியை விஜயா மீண்டும் வர வேண்டும்,' என்றனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அலுவலர் கூறியதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.