அழிவின் விளிம்பில் சுப்பாநாயக்கன் குளம்
வடமதுரை: வடமதுரை செங்குளத்துப்பட்டி ரயில்வே கேட் அருகில் இருக்கும் சுப்பாநாயக்கன் குளம் முறைகேடான ஆக்கிரமிப்பால் நீர் பிடிப்பு பகுதி சொற்பமாக மாறி அழிவின் விளிம்பில் பயனற்று கிடக்கிறது.வேலாயுதம்பாளையம் பண்ண மலை தொடரில் பெய்யும் மழை நீர் ஊற்றாக்கரை கண்மாயில் சேகரமாகிறது. இங்கு மறுகால் பாயும் நீருடன் சுற்றுப்பகுதி கிராமங்களில் பெய்யும் நீரும் சேர்ந்து ஓடையாக பயணித்து மொட்டணம்பட்டி அருகில் இரண்டாக பிரிந்து ஒரு ஓடை மொட்டணம்பட்டி, சித்துார் பெரியகுளம், களர்குளம் நிரம்பி வெளியேறும் நீர் செங்குளத்துபட்டி ரயில்வே கேட் அருகில் இருக்கும் சுப்பாநாயக்கன் குளத்திற்கு வந்து சேர்கிறது. மற்றொரு ஓடை செங்குளத்துப்பட்டி செங்குளம் நிரம்பியதும் சுப்பாநாயக்கன் குளத்தை வந்து சேரும். இக்குளம் நிரம்பிய பின்னர் மறுகால் நீர் வெள்ளபொம்மன்பட்டி கக்கன்குளம் வழியே வேல்வார்கோட்டை பெரிய குளம் சென்றடையும். 75 ஆண்டுகளுக்கு முன்னர் வரை 18.23 ஏக்கர் கொண்ட சுப்பாநாயக்கன் குளம் நிரம்பி சுற்றுவட்டாரத்தில் ஏராளமான கிணறுகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரத்தை வழங்கியது. பல நுாறு ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு மழை வளம் கிடைக்காத நிலையில் பரிதவித்த காரணங்களை உணர்ந்து, மழை கிடைக்கும் போது சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற குளங்களை உருவாக்கினர். ஆனால் சிலர் தங்களின் சுயலாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு ஆங்காங்கே அரசு இடங்களை அபகரித்து கட்டுமானங்களை எழுப்புகின்றனர். பிரச்னை நீதிமன்றங்களுக்கு செல்லும் போது ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு கிடைக்கிறது. பல சம்பவங்கள் ஓட்டு வங்கி அரசியல் காரணங்களுக்காக அப்படியே கிடப்பில் உள்ளன. இதுபோன்ற ஒரு சூழலில் இக்குளம் முறைகேடாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் தற்போது ஒரு ஏக்கர் அளவில் தான் குளத்தின் பரப்பு உள்ளது . முறைகேடாக பதிவு
ஜி.ரெங்கராஜ், விவசாயி: இப்பகுதியில் குளத்தின் மறுகால் பகுதியில் இருந்த நிலத்தை வாங்கி விவசாயத்தில் ஆர்வத்துடன் இறங்கினேன். சொத்துக்கு நில உரிமை சான்று பெறும் பணியை துவக்கியபோது அருகில் உள்ள சொத்துகளின் மூல பத்திரங்களை ஆய்வு செய்தபோது அரசு குளத்தின் பெரும்பகுதி முறைகேடாக 1951 ஆண்டில் மதுரை, வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகங்களில் உடமை மாற்றம் செய்து பத்திரப்பதிவு நடந்ததை கண்டறிந்தேன். இதையடுத்து அரசு குளத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக மாவட்ட நிர்வாகத்திடம் மனு செய்து சிலமாதங்களாக அரசு அலுவலகங்களுக்கு நடந்து வருகிறேன். அரசு கவனம் செலுத்தி அரசு குளத்தை மீட்க வேண்டும். ஒரு ஏக்கராக மாறிய- 18 ஏக்கர்
எஸ்.பிரதாபன், விவசாயி: சுப்பாநாயக்கன் குளத்திற்குள் சீமைகருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து கிடக்கிறது. இவற்றை அகற்ற வேண்டும். பலரும் முறைகேடாக ஆக்கிரமித்துள்ளதால் 18 ஏக்கர் குளம் தற்போது ஒரு ஏக்கர் என்ற அளவில் மட்டும் குளமாக காட்சியளிக்கிறது. ஆக்கிரமிப்பாளர்கள் கரைப்பகுதியை வெட்டி பெருமளவில் நீர் தேங்காதபடி செய்துள்ளனர். அரசு நிர்வாகம் கவனம் செலுத்தி இக்குளத்தை மீண்டும் நீர் சேகரமாகும் குளமாக மாற்றி இப்பகுதி பாலை வனமாக மாறுவதை தடுக்க வேண்டும்.