உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பேட் கேர்ள் பட அனுமதியை திரும்ப பெற வேண்டும்: தமிழ்நாடு பிராமண சமாஜம் வலியுறுத்தல்

பேட் கேர்ள் பட அனுமதியை திரும்ப பெற வேண்டும்: தமிழ்நாடு பிராமண சமாஜம் வலியுறுத்தல்

பழநி: ''பேட் கேர்ள் திரைப்பட காட்சிகள், கலாசாரத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளதால் அதற்கான அனுமதியை தணிக்கை குழு திரும்ப பெற வேண்டும்,'' என, பழநியில் தமிழ்நாடு பிராமண சமாஜ மாநில தலைவர் ஹரிஹர முத்து அய்யர் வலியுறுத்தினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: பேட் கேர்ள் தமிழ் திரைப்பட காட்சிகள் பகிரப்பட்டு வருகின்றன. இத்திரைப்படத்தில் பிராமண சமுதாயத்தை இழிவாக சித்தரிக்கப்பட்டதுடன் ஒட்டுமொத்தமாக நம் நாட்டின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை சீர்குலைக்கும் வகையில் காட்சிகள் உள்ளன. இந்திய நியாயச்சட்டம் (பாரத நியாய சம்ஹீதா), குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டம்(போக்சோ) போன்ற சட்டங்களின்படி 18 வயதிற்கு உட்பட்டவர்களுடன் எந்தவிதமான பாலியல் ரீதியான நடவடிக்கைகளும் தண்டனைக்குரிய குற்றச்செயலாகும்.திரைப்படத்தில் இளம் தலைமுறையினர் அனைவரையும் சட்டத்திற்கு புறம்பாக இத்தகைய செயல்களில் ஈடுபட ஊக்குவிக்கும் விதம் படத்தில் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய கருத்துரிமையானது சட்டத்தின் செயல்பாடு பொது ஒழுக்கம், கண்ணியம், ஒழுக்க முறை ஆகியவற்றிற்கு கட்டுப்பட்டதே ஆகும். பொது ஒழுக்கம், கண்ணியம், ஒழுக்க முறைகளுக்கு எதிராகவும், நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு முரணாக செயல்படுத்த துாண்டும் திரைப்படங்களை வெளியிடுவது கருத்துரிமையாகாது.இத்தகைய திரைப்படத்திற்கு தணிக்கை குழு அனுமதி அளித்து இருப்பது வேதனை அளிக்கிறது. திரைப்படத்தை உருவாக்கிய இயக்குனர், மாவட்ட தயாரிப்பாளர், படக்குழுவினருக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் கண்டனத்தை தெரிவிக்கிறது. தணிக்கை குழு அளித்த அனுமதியை திரும்ப பெற வேண்டும். அதற்கு உண்டான சட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு பிராமண சமாஜம் மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Suresh sridharan
பிப் 03, 2025 10:56

ஏன் இவர்களுக்கு பிராமணர்களைக் கண்டால் இவ்வளவு ஏலக்காய முன்பு ஒரு சினிமாவில் மாட்டிறைச்சி சமைக்கவும் இழிவுபடுத்தவும் செய்தீர்கள் இப்பொழுது ... பட்டம் ஒரு சமூகத்தின் மீது பல நூறு ஆண்டுகளாக இவர்களின் தாக்குதல் அதிகமாக அதிகம் அதிகம் நிறுத்திக் கொள்வது இவர்களுக்கு நல்லது அவர்களுக்கும் சூடு சொரணை உள்ளது அவர்கள் பொங்கி எழ இவர்களே காரணம் ஆட்சியாளர்கள் மற்றும் சினிமா துறை சேர்ந்த அனைத்து எல்லோரும் இதற்கு சில விஷயங்களில் அனுபவித்து தீர வேண்டும் நல்லதற்கில்லை இது


லிங்கம்,கோவை
பிப் 03, 2025 05:32

சபாஷ்... பரவாயில்லை இப்பொழுதாவது பிராமணர்கள் சற்று துணிச்சலுடன் செயல்படுகின்றனர். இப்படத்தை வெளிவராமல் கோர்ட்டின் மூலம் நிறுத்த வேண்டும். இந்து முன்னணியிடம் இதை எடுத்துச் சென்று போராட்டம் அறிவிக்க வேண்டும். வாழ்த்துக்கள்.


சமீபத்திய செய்தி