கைவிரலால் தொட்டலே பெயர்கிறது ரோடு
திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சியில் அவசரகதியில் போடப்படும் தார் ரோடுகள் கைவிரலால் தொட்டலே பெயரும் நிலையில் தரமற்று இருப்பதால் மக்கள் வரிப்பணம்தான் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி 17வது வார்டில் அரசன் நகர், ஆண்டாள் நகர், ரெங்கநாயகி நகர், லட்சுமி சுந்தரம் காலனி பகுதிகளில் ரோடு வசதியை மேம்படுத்த மாநகராட்சி சார்பில் இரு தினங்களுக்கு முன்பு தார் ரோடு போடப்பட்டது. இந்த ரோடுகள் தரமற்று கைவிரலால் தோண்டி எடுக்கக்கூடிய அளவுக்கு உறுதியற்று அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., மத்திய அரசு நலத்திட்டப்பிரிவு மாவட்டச் செயலாளர் துரை கணேசன் கூறுகையில்,''ரோடு அமைப்பதற்கான நெறிமுறைகளை பின்பற்றி இப்பகுதியில் தார் ரோடு அமைக்கவில்லை. இந்த ரோட்டில் தாரின் அளவு குறைவாக உள்ளது. பெரிய அளவு ஜல்லி கற்கள் மட்டுமே பயன்படுத்தி உள்ளனர். தெருவின் இருபுறங்களிலும் இரண்டடிக்கு இடைவெளி விட்டுள்ளனர். வெறுமனே கை விரலால் தோண்டினால் பெயர்ந்து விடும் நிலையில் அமைத்துள்ளனர். புதிய ரோடு அமைப்பதற்கு முன் பள்ளம் மேடுகளை சீர் செய்ய துாசு இல்லாமல் சுத்தம் செய்து ரோடை சமன் செய்ய வேண்டும். அதன்பின்பு ஜல்லி கற்கள் பரப்பி ரோடை நேர்செய்வதோடு தார், சிறிய ஜல்லி கற்கள் கலவையாக கொட்டி சாலை அமைக்கவேண்டும். அதன்மேல் எம்.சாண்ட் மண் துாவ வேண்டும். ஆனால் இந்த முறைப்படி எதையும் இதை வார்டு கவுன்சிலரும் கண்டுகொள்வில்லை. கேட்டதற்கு எல்லாம் சென்னையில் வந்த உத்தரவின்படி தான் வேலை நடக்கிறது என கூறுகிறார்கள். இதுபோன்ற தரமற்ற ரோடுகள் அமைப்பதால் மக்கள் வரிப்பணம்தான் வீணாகிறது. தரமற்ற ரோடுகளை ஆய்வு செய்து அரசு விதிமுறைகளை பின்பற்றி ரோடு அமைப்பதை உறுதி செய்யவேண்டும் '' என்றார்.