புரோக்கர் போல் செயல்படுகிறார் திருமாவளவன்: கிருஷ்ணசாமி புதிய தமிழகம் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி காட்டம்
திண்டுக்கல்; ''வி.சி.க., திருமாவளவன் தனது கடமையை மறந்து புரோக்கர் போல் செயல்படுகிறார். '' என புதிய தமிழகம் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி கூறினார். திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது : புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு 2026 ஜனவரி 7ம் தேதி மதுரையில் நடக்கிறது. தமிழகத்தில் சட்ட விரோதமாக 24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக் கடைகளால் ஏழை குடும்பங்கள் கடுமையாக பாதிக்கின்றன கிராமங்களில் வளர்ச்சியை காணமுடியவில்லை. தி.மு.க., அரசு நாள்தோறும் புதிய திட்டங்களை அறிவித்தும் எந்த திட்டமும் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக தெரியவில்லை. கட்டுப்பாடின்றி கனிமவள கொள்ளை நடைபெறுகிறது.வி.சி.க., திருமாவளவன் தனது கடமையை மறந்துவிட்டு புரோக்கர் போல் செயல்படுகிறார்.பாதிக்கப்பட்டவர்கள் உடன் நிற்காமல் போராட்ட குணத்தை மழுங்கடித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஆளுங்கட்சியினருக்கு எதிரான பிரச்னைகளை மறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். 2 சீட்களுக்கு மேல் பெறுவதற்காக இது போன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை திருமாவளவன் கைவிட வேண்டும். வேங்கை வயல் , திரவுபதி அம்மன் கோயில் விவகாரம் வரை ஆதிதிராவிட மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார். தி.மு.க., அரசு 505 வாக்குறுதி என்பதே ஏமாற்று வேலை. பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை . ஒரு கட்சி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். ஆட்சியில் பங்கு என்பதில் எங்கள் முடிவு பிரதானமாக இருக்கும். 2026 தேர்தலில் எந்த கட்சியும் 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியாது. துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய கட்சியை சேர்ந்தவர். அவருக்கு தமிழர் என்ற முத்திரை குத்த வேண்டிய அவசியமில்லை. அவர் நல்ல மனிதர் என்றார்.