உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கருவேல மரங்களால் சிதையும் ஊற்றாங்கரை சுற்றுலா தலம்

கருவேல மரங்களால் சிதையும் ஊற்றாங்கரை சுற்றுலா தலம்

வடமதுரை : வடமதுரை ஒன்றியத்தில் மினி சுற்றுலா தலமாக விளக்கும் வேலாயுதம்பாளையம் ஊற்றாங்கரை வனப்பகுதி சீமை கருவேல மரங்களால் அடையாளத்தை இழக்கும் நிலையில் உள்ளது.டி.புதுார், சாலியாபுரம், மூனாண்டிபட்டி, கே.புதுார், காளியகவுண்டனுார், பெரியநாகனுார், குஞ்சாகவுண்டனுார் கிராமங்களை கொண்ட வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் ஊற்றாக்கரை வனப்பகுதி மினி சுற்றுலா தலமாக விளக்குகிறது. கன்னிமார், முருகன், கருப்பணசுவாமி கோயில்கள் மத்தியில் இருக்க சுற்றிலும் பல ஏக்கர் பரப்பில் வனப்பகுதி உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் வரை அடர்த்தியான மரங்களுடன் இருந்த இதற்குள் 20 மீட்டர் துாரம் சென்றாலே அடர்ந்து வனத்திற்குள் இருக்கும் உணர்வு ஏற்படுத்தும். சுதந்திர, குடியரசு தினங்களில் வடமதுரை பகுதி மாணவர்கள் பள்ளிகளில் தேசிய கொடியேற்று விழா முடிந்ததும் நுாற்றக்கணக்கில் இங்கு சென்று திரும்புவது வழக்கம். தற்போது போதிய பராமரிப்பு இல்லாததால் சீமை கருவேல மரங்களின் ஆதிக்கம் அதிகரித்து சுற்றுலா வனப்பகுதிக்குரிய அஸ்தஸ்தை இழந்து வருகிறது. அடர் குறுவனம் வளர்க்கும் திட்டங்களில் தற்போதைய கலெக்டர் ஆர்வமுடன் செயல்படும் நிலையில் ஊற்றக்கரை வனப்பகுதியை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--அடிக்கடி விபத்துகள்

கே. ரவிச்சந்திரன்,ஊர் பண்ணைக்காரர், வேலாயுதம்பாளையம் : மூனாண்டிபட்டி வழியே சிங்காரக்கோட்டையை இணைக்கும் ரோட்டில் இருக்கும் தரைப்பாலம் சேதமடைந்து கிடக்கிறது. இதை சீரமைக்க வேண்டும். மயானத்திற்கான பாதை சீரற்று கிடப்பதால் சிரமம் உள்ளது. இப்பகுதியில் மேம்பாட்டு பணிகள் செய்ய வேண்டும். வேலாயுதம்பாளையம் நால் ரோட்டில் இருந்து சிங்காரக்ககோட்டை செல்லும் ரோடு வளைவில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் ரோட்டை நேர் பாதையாக்க வேண்டும்.

-ஒதுங்கி நிற்க இடமில்லை

எஸ்.கோபாலகிருஷ்ணன், வர்த்தக பிரமுகர், வேலாயுதம்பாளையம்: இப்பகுதி தோட்டங்களில் உலா வரும் குரங்கு கூட்டங்களால் அதிகளவில் விளை பொருட்கள் வீணாகின்றன. சாலியாபுரத்தில் மயான வசதி, கலையரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஊற்றாங்கரையில் பல்வேறு வைபவங்கள் நடக்கின்றன. சமையலும், உணவு பரிமாறுதலும் திறந்த வெளியிலே நடக்கிறது. வெயிலுக்கு நிழல் தரும் மரங்கள் உள்ளன. ஆனால் மழை வந்தால் அப்போது அங்கிருப்பவர் ஒதுங்கி நிற்க கூட இடமில்லை. இங்கு சமுதாய கூடம் கட்டி ஊராட்சி பராமரிப்பில் ஒப்படைக்கலாம். இதன் மக்கள் சிரமமும் குறையும், ஊராட்சிக்கு பராமரிப்பு வருவாய் கிடைத்தால் கூட போதுமானது.

-தேவை தடுப்புச்சுவர்

பி.ராமசாமி, தி.மு.க., மாவட்ட பிரதிநிதி, வேலாயுதம்பாளையம்: இங்கு கால்நடை மருந்தக வசதி இல்லாததால் காணப்பாடிக்கு நீண்ட துாரம் ஆடு, மாடுகளை அழைத்தும் செல்லும் நிலை உள்ளது. விவசாயம் சார்ந்த பகுதியான இங்கே கால்நடை மருத்துவம் கிடைக்க வழி செய்ய வேண்டும். இதேபோல வி.ஏ.ஓ., அலுவலகத்திற்காகவும் சிங்காரக்கோட்டை செல்லும் நிலை உள்ளது. 1997ல் வேலாயுதம்பாளையத்தில் கட்டப்பட்ட நிழற்கூடம் சேதமடைந்துள்ளதால் புதியது வேண்டும். ஊர் சின்னாறு ஓடையில் விநாயகர் கோயில் அருகில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !