மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த லாரி டிரைவர் பலியான பரிதாபம்
திண்டுக்கல்:மதுரையில் இருந்து பெங்களூருக்கு சென்ற இந்தியன் ஆயில் பெட்ரோல் டேங்கர் லாரி முன்பக்க டயர் வெடித்து திண்டுக்கல்லில் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்ததில் டிரைவர் இறந்தார். மற்றொருவர் காயமடைந்தார். கர்நாடகாவை சேர்ந்தவர் சந்திரசேகர் 60. ஓசூரு பின்னமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கிரண் 35. இருவரும் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு நேற்று முன்தினம் லாரியில் இந்தியன் ஆயில் கோடவுனிலிருந்து பெட்ரோலை ஏற்றி வந்தனர்.நேற்று இரவு பெட்ரோலை மதுரையில் இறக்கிவிட்டு மீண்டும் லாரியில் பெங்களூருவுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். 10:00 மணிக்கு திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலை பழநி பைபாஸ் மேம்பாலம் அருகே வந்த போது லாரி முன்பக்க டயர் வெடித்து மேம்பாலத்திற்கு தலை குப்புற கவிழ்ந்து கீழே ரோட்டில் விழுந்தது. தாடிக்கொம்பு போலீசார் லாரியில் சிக்கிய இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் லாரி டிரைவர் சந்திரசேகர் இறந்தார்.கிரணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவம் நடந்தபோது மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஆட்கள், வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.