சின்னாளபட்டி அருகே இரு தரப்பினர் மோதல்
சின்னாளபட்டி; இரு தரப்பினர் மோதலில் நால்வர் காயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே பெருமாள்கோவில்பட்டியில் காலி இடம் குறித்து இரு மதத்தினர் இடையே சர்ச்சை உள்ளது. வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரச்னைக்குரிய இடத்தில் ஊன்றப்பட்டிருந்த கற்களை ஒரு தரப்பினர் நேற்று முன்தினம் அகற்றினர். இதை மற்றொரு தரப்பினர் தட்டி கேட்டதில் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. நேற்று காலை போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்த நிலையில், இரு தரப்பினரும் கற்களால் தாக்கிக் கொண்டனர். இதில், முத்துராஜ், 32, கணேசன், 37, மணி, 41, தினேஷ், 38, ஆகியோர் காயமடைந்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோ பரவியது. திண்டுக்கல் ஆர்.டி.ஓ., சக்திவேல், ஆத்துார் தாசில்தார் முத்துமுருகன் முன்னிலையில், கூரை, ஊன்றப்பட்ட கற்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தினர். அப்பகுதியில் இருந்த தி.மு.க., -- அ.தி.மு.க., கொடி கம்பங்களும் அகற்றப்பட்டன. தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.