திண்டுக்கல் புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவில் 2000 கோழிகள், 1000 ஆடுகள் பலியிட்டு விருந்து
திண்டுக்கல்:திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு குழந்தைகளை ஏலம் விடும் வினோத வழிபாடு நடந்ததுடன் பொதுமக்கள் காணிக்கையாக வழங்கிய 1000 ஆடுகள், 2000 கோழிகள், காய்கறிகளை கொண்டு அசைவ உணவு தயாரிக்கப்பட்டு விடிய விடிய விருந்து நடந்தது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். புனித செபஸ்தியார் சர்ச் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் 4 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டு ஆக.,3 இவ்விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக அசைவ விருந்து நேற்று மாலை துவங்கி இன்று காலை வரை விடிய விடிய நடந்தது. இதையொட்டி நேற்று காலை சிறப்பு திருப்பலி, புனிதருக்கு காணிக்கை செலுத்துதல் நடந்தது. பொதுமக்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 1000 க்கும் மேற்பட்ட ஆடுகள், 2000 க்கும் மேற்பட்ட கோழிகள், டன் கணக்கான அரிசி, காய்கறிகளை கொண்டு நுாற்றுக்கணக்கான பணியாளர்கள் அசைவ உணவை தயாரித்தனர். நேற்று மாலை 6:00 மணிக்கு புனிதரின் மன்றாட்டு ஜெபம், வேண்டுதல் பூஜை முடிந்து இரவு 7 :00 மணிக்கு அசைவ விருந்து தொடங்கியது. இரவு முழுதும் அன்னதானம் நடந்தது. மதுரை, தேனி, திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் விழா, விருந்தில் பங்கேற்றனர். சர்ச் விழா விடிய விடிய விருந்து குழந்தைகள் ஏலம் இவ்விழாவையொட்டி குழந்தைகளை ஏலம் விடும் வினோத வழிபாடும் நடந்தது. குழந்தைகள் வேண்டியும், குழந்தைகள் உடல்நலம் சரியாக வேண்டியும் குழந்தைகளை ஏலம் விடுவதாக பெற்றோர் வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் குழந்தைகளை ஏலம் விட அவர்களது உறவினர்களே ஏலத்தில் பங்கேற்று ஏலம் எடுத்து அதன் நிதியை சர்ச்சுக்கே காணிக்கையாக வழங்குகின்றனர்.