உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரத்தில் காய்கறிகள் விலை வீழ்ச்சி

ஒட்டன்சத்திரத்தில் காய்கறிகள் விலை வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம், ஆக.29 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகளை கொள்முதல் செய்ய கேரள வியாபாரிகள் வராத நிலையில் கடந்த 3 நாட்களாக காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டியில் காந்தி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனைக்கு வரும் காய்கறிகளில் மூன்றில் இரண்டு பங்கு காய்கறிகளை கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் அவர்களை நம்பியே பெருமளவு வியாபாரம் நடக்கிறது. ஆக., 26ல் கேரளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனால் கடந்த 3 நாட்களாக அம்மாநில வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்ய வரவில்லை. இதற்கிடையில் மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்தும் அதிகமாக இருந்ததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஞாயிறன்று கிலோ ரூ.50க்கு விற்ற வெண்டைக்காய் நேற்று ரூ.12க்கும், ரூ.25க்கு விற்ற முருங்கை ரூ.15க்கும், ரூ.7க்கு விற்ற சுரைக்காய் ரூ.4க்கும் விற்பனை ஆனது. இதே போல் மற்ற காய்கறிகள், பயறு வகைகள் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. காய்கறிகளை விற்பனை செய்துவிட்டு கமிஷன், வாடகைக்கு கையில் இருந்து பணம் கொடுக்க வேண்டிய நிலையில் விலை இருப்பதால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். கமிஷன் கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘ஓணம் பண்டிகை முடிந்த பிறகும் கேரள வியாபாரிகள் இன்னும் காய்கறிகளை கொள்முதல் செய்ய வரவில்லை. இதனால் விலை பல மடங்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் வியாபாரிகள் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளது. அப்போது காய்கறிகள் விலை சற்று அதிகரிக்கும் என்றார்‌.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை