விதிமீறல்...: நகர், நெடுஞ்சாலைகளில் அதிகரிக்கும் விளம்பர போர்டுகள்: முறைப்படுத்தாததால் வருவாய் இழப்புடன் விபத்து அபாயம்
மாவட்டத்தில் காம்ப்ளக்ஸ்கள், வணிக வளாகங்கள், பெரிய கட்டடங்கள், முக்கிய சாலை சந்திப்புகள்,நெடுஞ்சாலை, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ராட்சத அளவில் விளம்பர பேனர்கள் வைக்கப்படுகிறது. பொது இடத்தில் விளம்பர போர்டுகள் வைப்பதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட இன்ஜினியரின் வரைபட ஒப்புதலில் விளம்பர பலகையின் சரியான அளவுகள் குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி, மாவட்ட நிர்வாக வருவாய் நிர்வாக பிரிவின் கீழ் முறையான அனுமதிபெற்று நிறுவவேண்டும். அதன்படி ஒவ்வொரு விளம்பர பலகைக்கும் குறிப்பிட்ட காலம் வரைக்கும் விளம்பர அனுமதி எண் வழங்கப்படும். இதுவே தனியார் கட்டடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளரிடம் தடையில்லா சான்று பெறுவது அவசியம். ஆனால் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், நத்தம் உட்பட மாவட்டம் முழுவதும் அனுமதியற்ற விளம்பர போர்டுகள் உள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி, மாவட்ட நிர்வாகத்துக்கு ரூ. கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் பொதுமக்கள் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. காற்றின் போது பறந்து விழுவதால் வாகனஓட்டிகள் ,பொது மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதை கருதி இவற்றின் மீது அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.