உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அன்பு பெருகுகிற இடத்திலே மகிழ்ச்சி, அமைதி

அன்பு பெருகுகிற இடத்திலே மகிழ்ச்சி, அமைதி

கிறிஸ்துப் பிறப்பு என்றாலே அனைவரின் மனங்களிலும் மகிழ்ச்சி ஆரவாரம் பொங்கி எழ ஆரம்பிக்கிறது. எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். (லுாக் 2:10) என்று இயேசுவின் பிறப்பு குறித்து வானதுாதர் மகிழ்ச்சி செய்தியை அறிவித்தனர். அப்படிபட்ட மகிழ்ச்சி உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் தங்க வாழ்த்துகிறேன். இறைவேண்டல் செய்கிறேன். ஹெலன் கெல்லர் என்கிற அமெரிக்க பெண்மணி விழி இழந்தவர். உயர்கல்வி கற்ற பிறகு தன்னைப் போன்று விழி இழந்தவர்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்து விழி இழந்தோரின் மேம்பாட்டுக்காக உழைத்தவர். இவரிடம் ஒரு நிருபர் ,கடவுள் உங்கள் முன் தோன்றி ஒரே ஒரு வரம் கொடுப்பேன் என்று சொன்னால் நீங்கள் எந்த வரத்தைக் கேட்பீர்கள் என்று கேட்டார். அதற்கு ஹெலன் கெல்லர் எனக்கு பார்வை வேண்டும் என்று கேட்பார் என பலர் நினைத்தனர். ஆனால் அவரோ உலக அமைதி வேண்டும் என கேட்பேன் என்று சொன்னாராம். இஸ்ரேல், - பாலஸ்தீன போர், ரஷ்யா, உக்ரைன் போர், மணிப்பூர் இனக்கலவரம், ஜாதி கலவரங்கள் போன்றவற்றால் மகிழ்ச்சி, அமைதி ஆகியவற்றை இழந்து நிற்கும் மானுடமாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 3ம் உலகப் போர் மூண்டு விடுமோ என்கின்ற அச்சத்தில் வாழ்கிறோம். இந்த அச்சம் நிறைந்த சூழலில் இயேசுவின் பிறப்பு நமக்கு அமைதியை வாக்களிப்பதாய் அமைவதோடு, அமைதியை ஏற்படுத்துபவர்களாய் நாம் மாற வேண்டும் என்கின்ற அழைப்பையும் விடுப்பதாய் அமைகிறது. இயேசுவின் பிறப்பின்போது வானதுாதர் பேரணி உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக. உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக. (லுாக் 2: 14) என்று புகழ்ந்து பாடினார்கள். எனில் அமைதியை நிலைப்படுத்த அவருக்கு உகந்தோராக நாம் மாற வேண்டும். இத்தகைய நிலையை அடைய உலகில் உள்ள எல்லா மனிதரும் சமம் என்பதை வாழ்வாக்க முயற்சி செய்ய வேண்டும். மனிதராய் பிறந்த கடவுளும் பேதங்களை உடைத்து, மானிடர் எல்லோரும் கடவுளின் பிள்ளைகள் என்பதை நிலைப்படுத்தப் போராடினார். எனவே எல்லோரையும் நம் சகோதர, சகோதரிகளாக கண்டுகொள்ள முயற்சி எடுப்போம். இந்த அன்பு கலாசாரமே போர், வன்முறை போன்ற தீய கலாசாரத்தை அழிக்கும் ஆயுதமாகும். அன்பு பெருகுகிற இடத்தில் மகிழ்ச்சியும்,அமைதியும் நிலையாய் தங்கும். இதற்காகவே கடவுள் மனிதரானார்.- தாமஸ்பால்சாமி,திண்டுக்கல் மறை மாவட்ட பிஷப்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ