தென்னையில் கருந்தலை புழு தாக்குதல் அதிகரிப்புகட்டுப்படுத்த தொழில் நுட்ப வல்லுனர் யோசனை
ஈரோடு, : ஈரோடு மாவட்டத்தில் தென்னையில் கருந்தலை புழு தாக்கு தல் அதிகரிப்பதால், அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். இதுபற்றி ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலைய உழவியல் தொழில் நுட்ப வல்லுனர் சரவணகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:தென்னையின் மகசூல் பல்வேறு பூச்சிகளால் பாதிக்கிறது. அவற்றுள் கருந்தலை புழு தாக்குதல் ஈரோடு மாவட்டத்தில் காணப்படுகிறது. ஆண்டு முழுவதும் தாக்கம் காணப்பட்டாலும், நவ., முதல் மே வரை அதிகம் காணப்படும்.அனைத்து வயது தென்னையையும் தாக்கும். கருந்தலை புழுவின் ஆயுட்காலம் இரண்டு மாதங்களாகும். இப்பூச்சி முட்டை, நீள் வட்ட வடிவில், வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இலைகளின் அடிப்பாகம், பச்சையம் சுரண்டப்பட்ட இடத்தில், பூச்சி கள் முட்டையிடும். முட்டை பருவம் ஐந்து நாட்கள்.நன்கு வளர்ந்த புழுக்கள், பச்சை நிறத்துடன் உடலில் பழுப்பு நிற வரிகளுடனும், தலை கருப்பாக இருக்கும். இப்புழு ஆயுட்காலம், 42 நாட்களாகும். பெண் அந்து பூச்சி ஆயுட்காலம், 5 நாளாகும். இவை தன் வாழ்நாளில், 135 முட்டை வரை இடும்.தென்னை இலைகளின் அடிப்பாக பச்சையங்களை சுரண்டி உண்பதால், இலையின் மேற்புறம் பழுப்பு நிற சல்லடை போலாகும். இலைகள் திட்டு திட்டாக காணப்படும்.பாதிப்படைந்த இலை, குரும்பை உதிர்வதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. தாக்கப்பட்ட ஓலைகள், மட்டைகளை அப்புறப்படுத்தி, தீயிட்டு அழிக்கலாம். புழு தாக்குதலின் தன்மைக்கேற்ப ஒட்டுண்ணிகளை தேவையான அளவு, தேவையான இடைவெளியில் விட வேண்டும்.லார்வா நிலையில் உள்ள பிரக்கானிட், பெத்திலிட் ஒட்டுண்ணிகளை மரம் ஒன்றுக்கு, 20 மற்றும், 10 என்ற எண்ணிக்கையில் இட வேண்டும்.தாக்கம் அதிகமானால் புழு, ஒட்டுண்ணி விகிதம், 1:8 என இட வேண்டும். ஒட்டுண்ணி களை வெளியிடும்போது, மரத்தின் அடிப்பாகத்தில் சிலந்திகள், வண்டுகள் இல்லாமல் பார்க்க வேண்டும். பூச்சி கொல்லி மருந்துகள் தெளித்திருந்தால் அல்லது வேர் மூலம் செலுத்தி இருந்தால், 21 நாட்கள் கழித்து ஒட்டுண்ணிகளை, 15 நாட்கள் இடைவெளியில், 5 அல்லது 6 முறை விட வேண்டும்.இள மரங்களில் பூச்சி களின் தாக்கம் காணப்பட்டால், இலையின் அடிப்பாகத்தில், நன்கு நனையும்படி மாலத்தியான் மருந்தை, 1 லிட்டர் தண்ணீருக்கு, 1 மி.லி., வீதம் கலந்து தெளிக்கலாம்.அதுபோல வேர் வழி மருந்திடுதலையும் பின்பற்றி புழு தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.