இன்று உலக மகளிர் தின விழா 74 வயதிலும் ஓயாத ஆராயம்மாள்
இன்று உலக மகளிர் தின விழா 74 வயதிலும் ஓயாத ஆராயம்மாள்சென்னிமலை:சென்னிமலை தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு சங்கம் (சென்கோப்டெக்ஸ்), வீட்டில் கைத்தறி போட்டு நெசவு செய்ய முடியாத, வறுமை நிலை நெசவாளர்களுக்காக உருவாக்கப்பட்டது. இங்கு ஆண், பெண் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நெசவு, நுால் சுற்றுதல், பாவு ஓட்டுதல் என பல்வேறு பணிகளில் ஒரே இடத்தில் வேலை செய்கின்றனர். இந்நிறுவனத்தில், 38 ஆண்டுகளாக நுால் சுற்றும் வேலை பார்க்கிறார், 77 வயதான ஆராயம்மாள்.கணவர் ஆறுமுகம் இறந்து எட்டு ஆண்டுகளாகி விட்டது. சென்னிமலை தான் சொந்த ஊர். கணவருடன் இந்த சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து, 38 ஆண்டுகளாக நுால் சுற்றும் பணி செய்கிறார். தற்போது ஒருநாளைக்கு, 150 ரூபாய் வரை நுால் சுற்றுகிறார். மகன், மூன்று மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமான நிலையில் ஒன்பது பேர குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்த பிறகு தனியாக வசிக்கிறார். காலை, 8:௦௦ மணிக்கு வந்தால், மாலை, 6:௦௦ மணி வரை நுால் சுற்றுகிறார். வீட்டில் ஓய்வாக இருக்க எனக்கு விருப்பமில்லை. இந்த உடலில் உயிர் உள்ளவரை கைத்தறி துணி உற்பத்தியில் ஈடுபட வேண்டும். தீபாவளி போனஸ், ௫,௦௦௦ ரூபாய் கிடைக்கும். அதை பேர குழந்தைகளுக்கு கொடுத்து மகிழ்வேன். உடல் ஒத்துழைக்கும் வரை உழைப்பேன் என்று உற்சாகமாக சொல்கிறார். ஆராயம்மாள் போல் இந்த பூமியில் கோடிக்கணக்கான பெண்கள் உள்ளனர். தாய்மை என்ற சொல்லை வரமாக கொண்ட பெண்மையை, மகளிர் தினத்தில் மட்டுமல்ல, எந்நாளும் மனதில் நிறுத்துவோம். பெண்மையை கொண்டாடுவதோடு நில்லாமல், அவர்களை பாதுகாப்பதும், எந்த நிலையிலும் துன்புறுத்தாமல் இருப்பதும் ஆண்களின் கடமையாக இருக்க வேண்டும். அதுதான் பெண்மைக்கும், தாய்மைக்கும் நாம் செய்யும் நன்றிக்கடன்.