தொழிலதிபர் கடத்தல் வழக்கில் 2 பேர் கைது
தாளவாடி: ஈரோடு மாவட்டம் தாளவாடியை சேர்ந்தவர் கிஷோர் குமார், 36; தொழிலதிபரான இவர் பல்வேறு தொழில் செய்கிறார். கடந்த, 3ம் தேதி இரவு கடையை அடைத்து விட்டு நடைபயிற்சி சென்றவர் கடத்தப்பட்டார்.தாளவாடி போலீசார் தேடியபோது, 5ம் தேதி காலை கும்பாரண்டி என்ற இடத்தில் காரில் வந்த கும்பல் கிஷோர்குமாரை இறக்கிவிட்டு தப்பினர். கும்பல் தாக்கியதில் காயமடைந்த கிஷோர்குமார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். காரில் கடத்திய கும்பல், முகத்தை துணியால் மூடி கடத்தி சென்றதாக தெரிவித்தார். தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் இது தொடர்பாக கர்நாடக மாநிலம் கோழிப்பாளையம் தேவராஜ், 57; தாளவாடி அருகேயுள்ள சிக்ககாஜனுாரை சேர்ந்த மஞ்சுநாதன், 30, ஆகியோரை, பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் நேற்று கைது செய்தனர். தொழிலதிபரை கடத்தினால் அதிக பணம் கிடைக்கும் என நினைத்து கடத்தியுள்ளனர். வழக்கில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.