விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காத 2 அரசு பஸ் ஜப்தி
கோபி, கோபி அருகே ஏழூர் மேட்டை சேர்ந்தவர்கள் சக்திவேல், 20, ஸ்ரீதர், 19, மகேந்திரன், 20; மூவரும் ஒரே பைக்கில், 2018 பிப்., மாதம் அதே பகுதியில் சென்றனர். பைக்கை சக்திவேல் ஓட்டினார். ஏழூர் மேடு பஸ் ஸ்டாப்பில், பைக் மீது அரசு டவுன் பஸ் மோதியதில் மூவரும் பலியாகினர். இவர்களின் குடும்பத்தினர் நஷ்ட ஈடு கோரி, கோபி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சக்திவேல் மற்றும் ஸ்ரீதர் தரப்பினரின் வழக்கில், 2020 ஆக.,5ல், அரசு போக்குவரத்து கழகம், 14.95 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டது.நஷ்டஈடு வழங்காததால் இரு தரப்பினர் குடும்பத்தினரும், 2025 ஏப்.,1ல் கட்டளை நிறைவேற்று மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து செப்.,16ல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ராமச்சந்திரன், நஷ்டஈடு வழங்காத அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கோபி பஸ் ஸ்டாண்டில், இரு மொபசல் பஸ்களை, நீதிமன்ற ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.