ஈரோட்டில் ரூ.3 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல் செயற்பொறியாளர் உட்பட 2 பேரிடம் விசாரணை
ஈரோட்டில் ரூ.3 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல் செயற்பொறியாளர் உட்பட 2 பேரிடம் விசாரணை ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகம், பழைய கட்டடம் நான்காவது தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் ஒரு பிரிவாக, மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகம் இயங்குகிறது. நாமக்கல்லை சேர்ந்த சேகர், 52, செயற்பொறியாளராக பணி செய்கிறார். ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு, லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., ராஜேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று இரவு, 7:00 மணிக்கு காத்திருந்தனர். ஈரோடு யூனியன் அலுவலகத்தில் ஓவர்சியராக (பணி மேற்பார்வையாளர்) பணி செய்து வரும் சுரேஷ்மணி, 48, கலெக்டர் அலுவலகத்தில் காத்திருந்தார். அவரிடம் ஒப்பந்ததாரர் ஒருவர், 500 ரூபாய் நோட்டு கட்டாக மூன்று லட்சம் ரூபாயை வழங்கிவிட்டு பைக்கில் வேகமாக சென்றுவிட்டார். பணத்தை பெற்று கொண்ட சுரேஷ்மணி, செயற்பொறியாளர் சேகரிடம் வழங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இருவரிடமும் தொடர் விசாரணை நடக்கிறது. தற்போது லஞ்சம் பெறப்பட்ட இதே தளத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், மூன்றாவது முறையாக நேற்று லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.