அரசால் தடை செய்த பிளாஸ்டிக் பை தயாரிப்பு ஜோர் 2வது நாள் சோதனையில் 3,310 கிலோ பறிமுதல்
ஈரோடு, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை தயாரிப்பு, மாநகராட்சி பகுதியில் அமோகமாக நடக்கிறது. இரண்டாவது நாளாக நடந்த சோதனையில், 3,310 கிலோ பையை பறிமுதல் செய்ததன் மூலம், அம்பலத்து வந்துள்ளது. ஈரோடு, மாமரத்துபாளையத்தை அடுத்த கொங்கம்பாளையத்தில், மாங்சிங் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பை தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை தயாரிக்கப்படுவதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் போனது.இதையடுத்து சுகாதார அலுவலர் பூபாலன், சுகாதார ஆய்வாளர் மணிவேல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் தீனதயாளன் அடங்கிய குழுவினர் நேற்று ஆய்வில் ஈடுபட்டனர். இதில் விற்பனைக்கு அனுப்புவதற்காக தயாராக வைத்திருந்த, ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பை, 3,310 கிலோ பறிமுதல் செய்தனர். உரிமையாளர் மாங்சிங்கிற்கு, 25,000 ரூபாய் அபராதம் விதித்தனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நிறுவனத்தின் மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆர்.என்.புதுார் சி.எம்.நகரில் கார்த்திக் என்பவரின் குடோனில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் நடத்திய சோதனையில், 1,440 கிலோ பிளாஸ்டிக் பையை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக நடந்த சோதனையில், ௩ டன் பிளாஸ்டிக் பை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.