ரூ.1 கோடி பறித்த வழக்கில் 4 பேர் கைது
பெருந்துறை:பெருந்துறையில்
ரியல் எஸ்டேட் அதிபரிடம், ஒரு கோடி ரூபாய் பணத்தை பறித்துச்சென்ற
சம்பவத்தில், தலைமைறைவாக இருந்த நான்கு பேரை போலீசார் கைது
செய்தனர்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை ராஜேந்திர பிரசாத் வீதியைச்
சேர்ந்தவர் குட்டி என்கிற அருண்குமார். ரியல் எஸ்டேட் மற்றும் கார்
விற்பனை தொழில் செய்கிறார். பெருந்துறை- காஞ்சிகோவில் ரோட்டில் தாய்
நகர் பகுதியில் சாய்பாபா கோவில் கட்டி வருகிறார். அதே பகுதியை
சேர்ந்த நந்தகுமாருக்கு பழக்கமான, திருப்பூரில் ரியல் எஸ்டேட்
தொழில் செய்து வரும் குமாரசாமி, நந்தகுமார் மூலம் அருண்குமாருக்கு
பழக்கமானார்.அவரிடம் பேசிய குமாரசாமி, ஒரு கோடி ரூபாய் கொடுத்தால், 1.15 கோடி ரூபாய் தருவதாக ஆசை காட்டியுள்ளார். இதனால்
கோவில் கட்ட வைத்திருந்த ஒரு கோடி ரூபாயை, கடந்த மாதம், 28ம் தேதி
கொடுத்தபோது, அவருடன் சென்றிருந்த கும்பல், பணத்தை பறித்து
தப்பியது. இதுகுறித்து பெருந்துறை போலீசில் புகார் தந்தார்.விசாரணை
நடத்திய போலீசார், திருப்பூரை சேர்ந்த குமாரசாமி, பரமேஸ்வரன்,
சாய்நாத், சேத்தன், கார்த்திக் மற்றும் சரவணன் என ஆறு பேரை கடந்த மாதம்,
31ம் தேதி கைது செய்தனர். இவர்களிடம், 2 லட்சம் ரூபாய் பணத்தை
பறிமுதல் செய்தனர். சம்பவத்தில், 98 லட்சம் ரூபாய் பணத்துடன்
தலைமறைவான நான்கு பேரை தேடி வந்தனர். நான்கு பேரையும் நேற்று கைது
செய்தனர்.நான்கு பேரும் திருப்பூர் மாவட்டம் பல்லடம், கரைப்புதுார்,
உப்பிலிபாளையம் விக்னேஸ்வரன், 30; பல்லடம் கணபதிபாளையம்
சந்தைக்கடை வீதி கனகராஜ், 25; திருப்பூர் வீரபாண்டி பிரிவு ராயல்
பார்க் வைஷ்ணவ், 28; திருப்பூர் காந்தி நகர் வலையன் காடு ஷாருக்கான், 29,
என நான்கு பேரையும் திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியில் கைது செய்து,
70 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.