பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் ஆபீஸ் பொருட்களை லவட்டினர்
சங்ககிரி, சங்ககிரி, சந்தைப்பேட்டை, கிராமச்சாவடி தெருவில், 'எம்ப்ளாயி சர்வீஸ் ஸ்டேஷன்' பெயரில் அலுவலகம் செயல்பட்டது. அங்கு, 27,000 முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை, மக்களிடம் பெற்றனர். அவர்களுக்கு வீடியோ அனுப்பி, அதை பார்ப்பவருக்கு தினம், 750 ரூபாய் வீதம் கொடுத்தனர். சில மாதங்களாக, இப்பரிமாற்றம் நடந்தது. இந்நிலையில், தினமும் கொடுத்து வந்த பணத்தை, அந்த நிறுவனம், 2 மாதங்களாக நிறுத்தியுள்ளது. அலுவலகமும் திறக்கப்படவில்லை.நேற்று அலுவலகம் திறக்கப்பட்டது. இதை அறிந்து அங்கு வந்த முதலீட்டாளர்கள், அலுவலகத்தில் இருந்த சோபாக்கள், நாற்காலி உள்ளிட்ட பல்வேறு தளவாட பொருட்களை எடுத்துச்சென்றனர். மற்ற பொருட்களையும் சாலையில் எடுத்து வந்து வைத்தனர்.அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சங்ககிரி போலீசார், போக்குவரத்தை சரி செய்தனர். அந்த நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர், பா.ஜ., முன்னாள் நிர்வாகி திவாகர் உள்ளிட்ட சிலரை, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரிக்கின்றனர். இந்நிலையில் பண முதலீட்டாளர்கள், அலுவலக பொருள்களை எடுத்து செல்வது, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.