மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., - காங்., வெளிநடப்பு
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில், தலைமை பொறியாளர் முருகேசன் முன்னிலையில் நேற்று நடந்தது.பருவமழையால் கொசுப்புழு பெருக்கம் ஏற்படும். அதை தடுக்க கொசு ஒழிப்பு பணியாளர்களை பகுதி நேரமாக நியமித்து, ஏற்கனவே இப்பணியில் உள்ளோரை மேலும், இரண்டு மாதம் பணி நீட்டிப்பு வழங்குதல். மறைந்த எம்.எல்.ஏ., இளங்கோவன் நினைவாக, 43வது வார்டு மண்டபம் வீதி என்ற பெயரை, 'ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீதி' என பெயர் மாற்றம் செய்யும் முன்மொழிவை அரசு அனுமதித்ததால், அரசுக்கு பிரேரணை அனுப்புவது. குமலன்குட்டை பகுதி மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடித்து அகற்றுவது. நான்காம் மண்டலத்தில் ஏற்கனவே உள்ள, 46 மேல்நிலை குடிநீர் தொட்டி, புதிதாக அம்ரூத் திட்டத்தில் அமைக்கப்பட்ட, 21 மேல்நிலை குடிநீர் தொட்டிகளை வெளிமுகவை பணியாளர் மூலம், குடிநீர் வினியோகம் செய்வது. செப்டிக் டேங்க் அகற்றும் பணிக்கு வழிகாட்டு நெறிமுதல் விதிப்பது போன்ற தீர்மானங்கள் பார்வைக்கு வைத்தனர்.குடிநீர் கட்டண டெபாசிட், கட்டணத்தை உயர்த்துவது, பாதாள சாக்கடை டெபாசிட், கட்டணத்தை மாற்றியமைப்பது போன்ற தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் ஆட்சேபனை தெரிவித்தததால், இரண்டையும் ஒத்தி வைத்தனர். மீதி, 53 தீர்மானங்கள் நிறைவேற்றினர்.கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: மாநகராட்சி வளர்ச்சி பணிகளில் முறையாக பணி செய்யாத ஒப்பந்ததாரர்களை பிளாக் லிஸ்டில் வைத்து, அவர்களுக்கு பணி வழங்கக்கூடாது. பி.எஸ்.பார்க் அருகே காந்திஜி சாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி அருகே சாலையை கடக்க முடியாததால், பஸ் ஸ்டாண்ட் அருகே பயனற்ற இரும்பு நடை மேம்பாலத்தை அகற்றி இங்கு நிறுவலாம்.கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தின் கீழ் சீரமைப்பை விரைந்து முடிக்க வேண்டும். பெருந்துறை சாலையில் அனுமதியின்றி செப்டிக் டேங்க் வாகனங்களை நிறுத்த கூடாது. ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது, வியாபாரிகளின் தள்ளுவண்டிகளை உடைத்தது பற்றி நெடுஞ்சாலை துறையிடம் விளக்கம் கேட்பது. ஊராட்சிகோட்டை குடிநீரை அனைத்து வார்டுகளிலும் முறையாக வினியோகிக்க வேண்டும். இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.காங்., கவுன்சிலர் வெளிநடப்புஈரோடு, நேதாஜி சாலை ஆயுர்வேத மருத்துவமனை டாக்டர் ஓய்வு பெற்றதால், பல மாதமாக பூட்டி கிடக்கும் மருத்துவமனையை திறக்க கோரி காங்., கவுன்சிலர் சபுரமா ஜாபர்சாதிக் வெளிநடப்பு செய்து, சிறிது நேரத்தில் திரும்பினார்.அ.தி.மு.க., வெளிநடப்புகுடிநீர் கட்டணத்தை உயர்த்தக்கூடாது. டெபாசிட்டை உயர்த்தக்கூடாது. சாலையோர வியாபாரிகளிடம் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தங்கமுத்து, ஜெகதீசன், நிர்மலா பழனிசாமி உட்பட ஐந்து பேர் வெளிநடப்பு செய்தனர்.