கழிவு கொட்டிய ஆட்டோ சிறைபிடிப்பு
ஈரோடு, ஈரோடு வைராபாளையம் காலிங்கராயன் வாய்க்கால் கரை சமீபத்தில் பல லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை, 7:45 மணிக்கு மினி டோர் ஆட்டோ வந்தது. ஆட்டோவில் இருந்து டிரைவர் இறங்கி, கட்டட கழிவுகளை, கரையோரம் கொட்ட துவங்கினார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் கழிவை கொட்ட விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த, 16வது வார்டு கவுன்சிலர் ரவியும் சென்றார். கட்டட கழிவுகளை கொட்ட கூடாது என்று எச்சரித்தார். கொட்டிய கழிவை எடுத்து செல்ல மக்கள் தெரிவித்ததால், கழிவுகளை அள்ளி ஆட்டோவில் போட்டு எடுத்து சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.