சாலைகளில் அச்சுறுத்தலாக தொங்கும் ஒயர்கள் கேபிள் நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயுமா?
ஈரோடு: தொலைக்காட்சி கேபிள்களை உள்ளாட்சி அமைப்புகள் முறைப்படுத்தும் திட்டம் வகுக்காததால், ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதிகளில், கேபிள்கள் வலைப்பின்னல் போன்று பின்னிப் பிணைந்து மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.குறிப்பாக, வீடு மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லும் கேபிள்கள் அனைத்தும், மாநகராட்சி தெருவிளக்கு கம்பங்களையே நம்பியுள்ளன. ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே சொந்தமாக கம்பங்களை அமைத்து கொள்கின்றன. பெரும்பாலானவை அனுமதி பெறாமலும், பெற்ற அனுமதியை விட அதிகமான நீளத்துக்கும் கேபிள்களை நிறுவி கொள்கின்றன.இந்த இணைய சேவை மற்றும் கேபிள் டிவி நிறுவனங்களுக்கு உயர்மட்ட செல்வாக்கு இருப்பதால், விதிகளை முறையாக பின்பற்றி, கேபிள்களை நிறுவுவதில்லை. மாநகரில் பல இடங்களில் இந்தக் கேபிள்கள் ஆபத்தான முறையில், பாதசாரிகளின் கழுத்தை பதம் பார்க்கும் வகையில் சாலைகளில் தொங்கிக்கொண்டு இருக்கின்றன. உயரமான கனரக வாகனங்கள் செல்லும்போது கேபிள்கள் அறுந்தும், பாதிப்பை ஏற்படுத்துகின்றன.மூன்று மாதங்களுக்கு முன், மாநகரப் பகுதிகளில் விதிமீறி போடப்பட்டுள்ள கேபிள் வயர்களை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அகற்றிக் கொள்ள, மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன் பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், சாலையில் ஆபத்தான நிலையில் கேபிள் வயர்கள் தொங்கி கொண்டிருக்கின்றன. மாநகராட்சி நிர்வாகம் மெத்தனப்போக்கை கைவிட்டு, விதிமீறி செயல்படும் கேபிள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.