வாய்க்காலில் பாய்ந்த கார்; ஒருவர் மாயம்
சத்தியமங்கலம் சத்தியமங்கலம் அருகேயுள்ள செண்பகபுதுாரை சேர்ந்தவர் பிரகாஷ், 45; மாரனுாரை சேர்ந்தவர் பிரபாகரன், 35; சின்ன வாய்புதுாரை சேர்ந்தவர் ரங்கசாமி, 37; மூவரும் சுவிப்ட் டிசையர் காரில், அதே பகுதியில் எல்.பி.பி., வாய்க்கால் ரோட்டில் நேற்று மாலை சென்றனர். பிரகாஷ் காரை ஓட்டியுள்ளார்.அப்போது எதிர்பாராதவிதமாக கார் வாய்க்காலில் பாய்ந்தது. இதில் ரங்கசாமி, பிரபாகரன் கதவை உடைத்து தப்பினர்.பிரகாஷால் வர முடியாததால் சத்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சத்தி தீயணைப்பு நிலைய வீரர்களுடன் சென்ற போலீசார், வாய்க்காலில் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி காரை மீட்டனர்.ஆனால் பிரகாஷை காணவில்லை. அவர் நீரில் மூழ்கினாரா? தப்பினாரா? என்பது தெரியவில்லை. அதேசமயம் இரவாகி விட்டதால் தேடும் பணியும் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.