காங்கேயம் ஜி.ஹெச்.,ல் ஒரே கவரில் மாத்திரை வழங்குவதால் குழப்பம்
காங்கேயம், காங்கேயம் அரசு மருத்துவமனை, திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக உள்ளது. காங்கேயம் மற்றும் வெள்ளகோவில், படியூர், ஊதியூர், நத்தக்காடையூர், ஆலம்பாடி, வட்டமலை மற்றும் திட்டுப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து நாள்தோறும், நுாற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். பரிசோதனை, மருத்துவர் ஆலோசனைக்குப் பிறகு, நோயாளிகளுக்கு மாத்திரை எழுதி தரப்படுகிறது. ஆனால், மாத்திரைகளை தனித்தனி கவரில் போட்டு தராமல், ஒரே கவரில் போட்டு தருகின்றனர். இதனால் படிக்க தெரியாத, விபரம் புரியாத ஏழை நோயாளிகள் குழப்பத்துக்கு ஆளாகினர். எந்த மாத்திரையை எந்த நேரத்தில் சாப்பிடுவது, சாப்பாட்டுக்கு முன்பா, பின்பா என தெரியாமல் தவிக்கின்றனர். மாத்திரை தரும்போது விபரம் சொன்னாலும், தனித்தனி கவரில் போட்டு எழுதி தந்தால், உபயோகமாக இருக்கும் என்பது, எழுத படிக்க தெரியாத நோயாளிகளின் கோரிக்கையாக உள்ளது.