மாநகராட்சியில் பார்க்கிங் கட்டணம் மீண்டும் உயர்வு
மாநகராட்சியில் பார்க்கிங்கட்டணம் மீண்டும் உயர்வுஈரோடு, நவ. 1-ஈரோடு கனிமார்க்கெட் வணிக வளாகத்தில், பார்க்கிங் கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் வருவதில்லை என, ஜவுளி வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.ஈரோடு மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ், கனிமார்க்கெட் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இதில், 290க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றன. வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் தனியாருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. நான்கு மணி நேரம் வரை, இருசக்கர வாகனங்களுக்கு, 20 ரூபாய், நான்கு சக்கர வாகனங்களுக்கு, 50 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இது அதிகமாக இருப்பதால், வணிக வளாகத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் திரும்பி செல்வதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். பார்க்கிங் கட்டணத்தை குறைக்க வேண்டும் என, மாநகராட்சிக்கு கோரிக்கை விடப்பட்டது. அதன்படி கட்டணம், 10 ரூபாயாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக, பார்க்கிங் கட்டணம் மீண்டும், 20 ரூபாயாக உயர்த்தப்பட்டது.இது குறித்து, ஜவுளி வியாபாரிகள் கூறுகையில்,' பார்க்கிங் கட்டணம் உயர்வால், கனி மார்க்கெட் வணிக வளாகத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் பலரும், நுழைவு வாயிலோடு திரும்பி செல்கின்றனர். அவர்கள், சாலையோரங்களில் புதியதாக போடப்பட்ட கடைகளை நாடி செல்கின்றனர். இதனால், எங்களுக்கு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு, பார்க்கிங் கட்டணத்தை குறைக்க வேண்டும்,'' என்றனர்.