மாற்றுத்திறனாளிகள் மறியல்; 227 பேர் கைது
ஈரோடு: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மூன்றாவது நாளாக நேற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சாவித்ரி தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்றபோது, பேரிகார்டு வைத்து போலீசார் தடுத்தனர். ஆனாலும் போலீசாரை நகர்த்தி கொண்டு, பெருந்துறை - ஈரோடு சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அப்போது போலீசாருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தள்ளுமுள்ளு நடந்தது. இதனால் மறியலில் ஈடுபட்ட, 227 பேரை போலீசார் கைது செய்தனர்.