ஓடை, வடிகாலில் துார்வாரும் பணி துவக்கம்
ஈரோடு:ஈரோடு மாநகராட்சி, 15 வது வார்டுக்கு உட்பட்ட பவானி சாலை, அன்னை சத்யா நகர், பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் துார்வாரும் பணி நடந்தது. கைத்தறி, துணி நுால் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, பணியை துவக்கி வைத்து கூறியதாவது:வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநகராட்சி பகுதியில், 53.90 லட்சம் ரூபாயில், ஐந்து ஓடைகளில் துார்வாரும் பணி நடக்கிறது. இதன்படி ஒண்டிக்காரன்பாளையம் (2.50 கி.மீ.,), கருவில்பாறைவலசு (0.60 கி.மீ.,), சாஸ்திரி சாலை (1.60 கி.மீ.,), கொல்லம்பாளையம் கட்டபொம்மன் வீதி (2 கி.மீ.,), மோசிகீரனார் வீதி ஆற்றுடன் இணையும் பகுதி வரை (3.65 கி.மீ.,), துார் வாரப்படுகிறது. இதுபோல வேறு சில பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.இதை தொடர்ந்து காவிரி ஆறு சோழீஸ்வரர் கோவில் அருகே, வெள்ளத்தில் இருந்து, மக்கள் தங்களை காத்து கொள்ளுதல் குறித்து பேரிடர் மீட்பு செயல் விளக்கம் நடந்தது. இதையும் அமைச்சர் பார்வையிட்டார்.