ஈரோடு மாநகராட்சி கமிஷனர் பதவியேற்பு
ஈரோடு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது, நடந்த வேட்புமனு தாக்கலில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பத்மாவதி என்பவரின் வேட்புமனு தவறுதலாக ஏற்கப்பட்டது. இதனால், ஈரோடு மாநகராட்சி கமிஷனராகவும், தேர்தல் நடத்தும் அலுவலருமாக இருந்த நாரணவாரே மனிஷ் ஷங்கர்ராவ், கடந்த ஜன.,21ல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ஜன.,22ல், அந்த பொறுப்புக்கு ஓசூர் மாநகராட்சி கமிஷனராக பணி செய்த ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டு இடைத்தேர்தல் பணிகள் முடிக்கப்பட்டது.பிறகு ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை கலெக்டராக மாற்றப்பட்டதால், ஈரோடு மாநகராட்சி கமிஷனர் பணி காலியாக இருந்தது. பொறுப்பு கமிஷனராக தனலட்சுமி பணி செய்து வந்தார். இந்நிலையில், ஈரோடு கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஹர்பித் ஜெயின், ஈரோடு மாநகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டார். நேற்று மாநகராட்சி அலுவலகம் வந்த அவர், கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றார். அவருக்கு மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.