உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

புன்செய்புளியம்பட்டி,நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்து, கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. மேலும் கோவை மாவட்டம் பில்லுார் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் பவானிசாகர் அணைக்கு வந்து சேர்கிறது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம், 91.68 அடி; நீர் இருப்பு 22.6 டி.எம்.சி.,யாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து, 11 ஆயிரத்து 247 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து அரக்கன்கோட்டை தடப்பள்ளி, காளிங்கராயன் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில், 1,300 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில், 5 கன அடி தண்ணீரும் என மொத்தம், 1,305 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !